

திருச்சி காவிரிப் பாலத்தை முறையாக சீரமைக்கக் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் இன்று காவிரிப் பாலத்தில் சாக்குப் போட்டி நடத்தினர்.
திருச்சியில் சிந்தாமணி-மாம்பழச் சாலை ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் காவிரியின் குறுக்கே பிரிட்டிஷார் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட பாலம் 1924-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் உடைந்து சேதமடைந்தது. உடைந்த பாலத்தின் அஸ்திவாரத்தில் தூண்களை எழுப்பி, அதன்மீது இரும்பால் ஆன பக்கவாட்டுச் சுவருடன் கூடிய புதிய பாலம் கட்டப்பட்டு 1929, ஜன.24-ல் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்டது.
வாகனப் பெருக்கம், போக்குவரத்து நெரிசல் காரணமாக பழைய பாலத்துக்குப் பதிலாக அதனருகிலேயே அகலமான புதிய பாலம் கட்டும் பணி 1972-ல் தொடங்கியது. பணிகள் முடிந்து 1976, ஜூன் 6-ம் தேதி மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. இதனால், பழைய பாலம் கைவிடப்பட்டுவிட்டது.
காவிரியின் குறுக்கே புதிய பாலம் கட்டி 44 ஆண்டுகள் ஆன நிலையில், அதில், பல்வேறு சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக, பாலத்தில் இருந்த சிமெண்ட் ரோடு பெயர்த்து எடுக்கப்பட்டு, அதற்குப் பதிலாக தார் சாலை போடப்பட்டது. ஆனால், அதன்பிறகு பாலத்தில் இணைப்புகள் உள்ள பகுதிகளில் பள்ளம் ஏற்படுவது தொடர் கதையாகி வருகிறது.
இந்தப் பள்ளத்தால் விபத்து, வாகனப் பழுது எனப் பல்வேறு வழிகளில் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, காவிரிப் பாலத்தை தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆலோசனையுடன் சீரமைக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
இந்தநிலையில், காவிரிப் பாலத்தை முறையாக சீரமைக்காததைக் கண்டித்தும், சீரமைக்க வலியுறுத்தியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஸ்ரீரங்கம் பகுதிக் குழு சார்பில் இன்று (செப். 21) காவிரிப் பாலத்தில் சாக்குப் போட்டி நடத்தும் நூதனப் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சணல் சாக்கில் தங்கள் கால்களை நுழைத்துக் கொண்டு, தாவித்தாவிக் குதித்து முழக்கங்களை எழுப்பினர்.
தகவலறிந்து நெடுஞ்சாலைத் துறை அலுவலர்கள் வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். காவிரிப் பாலத்தில் உள்ள பள்ளங்கள் உடனடியாக சீரமைக்கப்படும் என்றும், புதிய பாலம் கட்ட அரசுக்குப் பரிந்துரை செய்யப்படும் என்றும் உறுதி அளித்தனர். இதையடுத்து, வாலிபர் சங்கத்தினர் போராட்டத்தை முடித்துக் கொண்டு கலைந்து சென்றனர்.