கோவை சாடிவயல் யானைகள் முகாமில் இருந்த இரு 'கும்கி' யானைகள் டாப்சிலிப் பகுதிக்கு அனுப்பிவைப்பு: மாற்று யானைகளை அழைத்துவர வனத்துறை முடிவு

கும்கி யானை சுயம்பு.
கும்கி யானை சுயம்பு.
Updated on
1 min read

மாற்று கும்கி யானைகளைக் கொண்டுவருவதற்காக கோவை சாடிவயல் யானைகள் முகாமில் இருந்த வெங்கடேஷ், சுயம்பு ஆகிய இரண்டு கும்கி யானைகளும் டாப்சிலிப் யானைகள் முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

கோவையில் மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் யானைகள் வழித்தட ஆக்கிரமிப்பு, காடுகளையொட்டி நடைபெறும் விவசாயப் பணிகள் போன்ற பல்வேறு காரணங்களால் யானைகள் ஊருக்குள் புகுவதும், யானைகள் தாக்கி உயிரிழப்புகள் ஏற்படுவதும் தொடர் கதையாகி வருகின்றன.

யானை-மனித மோதல் அடிக்கடி நிகழ்வதால் ஊருக்குள் புகும் யானைகளை விரட்ட 'கும்கி' யானைகள் அடிக்கடி தேவைப்பட்டதால், முதுமலை மற்றும் டாப்சிலிப்பில் உள்ளது போலவே கோவை போளுவாம்பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட கோவை குற்றாலம் அருகே உள்ள சாடிவயலில் கடந்த 2011-ம் ஆண்டு யானைகள் முகாம் அமைக்கப்பட்டது.

இங்கிருந்த ஜான், சேரன் ஆகிய கும்கி யானைகள், காட்டு யானைகளை விரட்டப் போதிய திறன் இல்லாமல் இருந்ததால், அவை முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமுக்குக் கடந்த ஆண்டு அனுப்பி வைக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து, பொள்ளாச்சி டாப்சிலிப் பகுதியில் உள்ள கோழிகமுத்தி முகாமில் இருந்து வெங்கடேஷ் (33), சுயம்பு (23) ஆகிய இரண்டு கும்கி யானைகள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சாடிவயலுக்குக் கொண்டுவரப்பட்டன.

கும்கி யானை வெங்கடேஷ்
கும்கி யானை வெங்கடேஷ்

இந்நிலையில், அந்த இரண்டு யானைகளுக்குப் பதில் வேறு கும்கி யானைகளைக் கொண்டுவர வனத்துறை முடிவு செய்துள்ளது. இதையடுத்து, மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் காலில் காயம்பட்ட நிலையில் சுற்றிவந்த யானையை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்கும் பணியில் ஈடுபடுத்துவதற்காக கொண்டு செல்லப்பட்ட சுயம்பு யானை, நேரடியாக மேட்டுப்பாளையத்தில் இருந்து கடந்த 19-ம் தேதி டாப்சிலிப் முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டது.

அதைத்தொடர்ந்து, சாடிவயலில் இருந்து மற்றொரு கும்கி யானையான வெங்கடேஷும் இன்று (செப். 21) காலை டாப்சிலிப் முகாமுக்கு லாரியில் அனுப்பி வைக்கப்பட்டது. விரைவில், இந்த இரு யானைகளுக்குப் பதில் வேறு யானைகள் கொண்டுவரப்படும் எனவும், இன்னும் எந்த யானைகள் என முடிவாகவில்லை எனவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in