

நீலகிரி மாவட்டத்தில் மீண்டும் தொடர் மழை பெய்து வருகிறது. பலத்த காற்று வீசுவதால் ஆங்காங்கே மரங்கள் சாய்ந்தன. இதனால் மின் தடை ஏற்பட்டு உதகை நகரம் இருளில் மூழ்கியது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த மாதம் பெய்த கனமழை காரணமாக மாவட்டத்தின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. மழையின் தீவிரம் குறைந்து மாவட்டம் இயல்பு நிலைக்குத் திரும்பி வந்துகொண்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் தொடர் மழை பெய்யத் தொடங்கியுள்ளது.
மழையுடன் பலமாக காற்று வீசி வருவதால், ஆங்காங்கே மரங்கள் சாய்ந்துள்ளன. மரங்கள் விழுந்ததால், உதகை நகரில் அடிக்கடி மின் தடை ஏற்பட்டது.
உதகை-கூடலூர் சாலையில் தலைகுந்தா, ஷூட்டிங்மட்டம் பகுதிகளில் மரங்கள் சாலையின் குறுக்கே விழுந்தன. அவற்றைத் தீயணைப்புத் துறையினர் வெட்டி அகற்றினர்.
இந்நிலையில், நேற்று (செப். 20) உதகை பாரதி நகர், பட்ஃபயர் பகுதிகளில் மரங்கள் விழுந்தன. உதகை தலைகுந்தா அருகே உயரழுத்த மின் கோபுரத்தில் விழுந்த மரத்தை தீயணைப்புத் துறை நிலைய அலுவலர் ரவிகுமார் தலைமையில் தீயணைப்புத் துறையினர் வெட்டி அகற்றினர்.
மாவட்டத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 182 மி.மீ. மழை பதிவானது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அதிக அளவில் மழை பெய்து வருவதால், அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
குந்தா மேற்பார்வை செயற்பொறியாளர் ரவி கூறும் போது, "அப்பர்பவானி, எமரால்டு, அவலாஞ்சி, கெத்தை, குந்தா, மாயார், பைக்காரா உள்ளிட்ட அணைகள் முழு கொள்ளளவை எட்டி வருகின்றன. ஒருசில நாட்கள் மழை தொடர்ந்தால், பெரும்பாலான அணைகள் முழு கொள்ளளவை எட்டிவிடும். தற்போதுவரை, மின் உற்பத்தி தடையின்றி நடந்து வருகிறது" என்றார்.
தொடர் மழையால் பகல் நேரத்திலேயே கடும் குளிர் நிலவுகிறது. குறைந்தபட்ச வெப்பநிலை 8 டிகிரி செல்சியஸ் ஆகவும், அதிகபட்ச வெப்பநிலை 13 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகியுள்ளது.
இந்நிலையில், பேரிடரைச் சமாளிக்க மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.
அவர் கூறுகையில், "நீலகிரி மாவட்டத்தில் அதிக கனமழை குறிப்பாக குந்தா, அவலாஞ்சி, பந்தலூர் மற்றும் அப்பர்பவானி ஆகிய பகுதிகளில் பெய்து வருகிறது. தற்போது காற்று அதிக அளவு வீசி வருவதால், பல்வேறு பகுதிகளில் மரங்கள் சாய்ந்துள்ளன. பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே செல்வதை சில தினங்களுக்குத் தவிர்க்க வேண்டும்.
அபாயகரமான மரங்கள், பழுதடைந்த வீடுகள் தொடர்பான தகவல்கள் இருந்தால், உடனடியாக பொதுமக்கள் கட்டுப்பாட்டு அறை எண் 1077 என்ற இலவச எண்ணுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.
மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு மிகவும் அபாயகரமான பகுதிகளைக் கண்டறிந்து, கண்காணிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களைப் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்க நிவாரண முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மரங்களை வெட்டி அகற்றுவதற்கான இயந்திரங்கள், பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
முதல்நிலைப் பொறுப்பாளர்கள் தயார் நிலையில் இருந்து, அப்பகுதிகளில் ஏற்படும் மழை பாதிப்புகள் குறித்த தகவல்களை உடனடியாக மாவட்ட நிர்வாகத்துக்குத் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் 280 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், மிகவும் அபாயகரமான பகுதிகளைக் கண்காணிக்க 45 குழுக்கள் அமைக்கப்பட்டு, தொடர்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்" என்று ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.