

ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து, சென்னை குடிநீருக்காக திறக்கப்பட்டுள்ள கிருஷ்ணா நீர் இன்று காலை பூண்டி ஏரிக்கு வந்தடைந்தது.
தெலுங்கு கங்கை திட்ட ஒப்பந்தப்படி, ஆந்திர மாநில அரசு, சென்னை குடிநீர் தேவைக்காக கண்டலேறு அணையிலிருந்து, தமிழகத்துக்கு ஆண்டுதோறும் ஜூலை முதல், அக்டோபர் வரை 8 டி.எம்.சி., ஜனவரி முதல், ஏப்ரல் வரை 4 டி.எம்.சி., என, 12 டி.எம்.சி., கிருஷ்ணா நீர் வழங்க வேண்டும்.
ஆனால், கண்டலேறு அணையின் நீர் இருப்பு குறைவால் நடப்பாண்டுக்கான முதல் தவணை கடந்த ஜூலை தொடங்கியும், அணையிலிருந்து நீர் திறக்காமல் இருந்து வந்தது ஆந்திர அரசு..
இச்சூழலில், தென்மேற்கு பருவமழையால், ஆந்திராவின் ஸ்ரீசைலம் அணை நிரம்பியதால், கிருஷ்ணா நீர் சோமசீலா மற்றும் கண்டலேறு அணைகளுக்கு சென்று கொண்டிருக்கிறது. ஆகவே, ஆந்திர அரசிடம் சென்னை குடிநீர் தேவைக்காக, நடப்பு நீர் ஆண்டுக்கான கிருஷ்ணா நீரை கண்டலேறு அணையிலிருந்து திறக்கவேண்டும் என, தமிழக அரசு கோரிக்கை வைத்தது.
அதன் விளைவாக, சென்னை குடிநீருக்காக, கண்டலேறு அணையிலிருந்து கிருஷ்ணா நீரை கடந்த 18-ம் தேதி முதல் திறந்து வருகிறது ஆந்திர அரசு. தொடக்கத்தில் விநாடிக்கு 1,500 கன அடி என திறக்கப்பட்ட கிருஷ்ணா நீர், படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, நேற்று (செப். 20) காலை முதல் விநாடிக்கு 2000 கன அடி என, திறக்கப்பட்டு வருகிறது.
அவ்வாறு கண்டலேறு அணையிலிருந்து திறக்கப்படும் கிருஷ்ணா நீர், கண்டலேறு அணையிலிருந்து 152 கி.மீ.,தொலைவில் உள்ள தமிழக எல்லையான, ஊத்துக்கோட்டை அருகே தாமரைக்குப்பத்தில் உள்ள ஜீரோ பாயிண்ட்டுக்கு, நேற்று இரவு வந்தடைந்தது. அதனை, தமிழக, ஆந்திர அதிகாரிகள் மலர் தூவி வரவேற்றனர்.
அப்போது,விநாடிக்கு 30 கன அடி என வந்துக் கொண்டிருந்த கிருஷ்ணா நீர், இன்று (செப். 21) காலை நிலவரப்படி விநாடிக்கு 233 கன அடி என, ஜீரோ பாயிண்ட்டுக்கு வந்து கொண்டிருக்கிறது.
ஜீரோ பாயிண்ட்டுக்கு வந்த கிருஷ்ணா நீர், ஜீரோ பாயிண்ட்டிலிருந்து, 25 கி.மீ., தூரத்தில் உள்ள பூண்டி ஏரிக்கு இன்று காலை 6.10 மணிக்கு வந்தடைந்தது. அப்போது, விநாடிக்கு 100 கன அடி என வந்து கொண்டிருந்த கிருஷ்ணா நீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கும் என, பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.