

கடலோரப் பாதுகாப்பு திட்டங்களுக்கு என மத்திய அரசு ரூ.778,06 கோடி ஒதுக்கியிருப்பதாக நாடாளுமன்றத்தில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இது திமுக எம்பியான தமிழச்சி தங்கபாண்டியனின் மக்களவை கேள்விக்கானப் பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது
சென்னை எம்.பியான தமிழச்சி தங்கபாண்டியனின் கேள்விக்கு எழுத்துபூர்வப் பதிலளித்த மத்திய உள்துறை இணை அமைச்சரான நித்தியானந்த் ராய் கூறியதாவது:
கடலோரப் பகுதிகளில் ரோந்து மற்றும் கண்காணிப்புக்காக கடலோர காவல் படையின் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கத்துடன் கடலோர பாதுகாப்பு திட்டம் படிப்படியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின், முதல் கட்டம் 2005-2011 ஆம் ஆண்டில் கடலோர மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்ககளிலும் திட்டமிட்டபடி செயல்படுத்தப்பட்டது. இந்திய கடலோர காவல்படை உள்ளிட்ட அனைத்து பங்குதாரர்களுடன் கலந்தாலோசித்து, பாதிப்பு மற்றும் இடைவெளி ஆய்வு அடிப்படையில் இத்திட்டத்தின் இரண்டாம் கட்டம் உருவாக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கடந்த ஏப்ரல் 04, 2011 முதல் மார்ச் 31, 2020 வரை இத்திட்டத்தின் கீழ் மொத்தம் ரூ.778.06 கோடி செலவில் கடலோர மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.
இதில், 204 கடலோர காவல் நிலையங்கள், 204 படகுகள், 60 ஜெட்கள், 284 நான்குசக்கர வாகனங்கள், 554 இருசக்கர வாகனங்கள், 97 சோதனைச் சாவடிகள், 58 புறக்காவல் நிலையங்கள் மற்றும் 30 தடுப்புக் காவல் நிலையங்கள், நேவிகேஷன் தொடர்பாடல் கருவிகள், அட்டை வாசிப்பவர்கள், இரவு நேர இயக்கத்திறனை மேம்படுத்தும் படகுகள், கணினி அமைப்புகள் போன்றவை இடம் பெற்றுள்ளன.
தமிழ்நாடு உட்பட கடலோர பகுதிகளில் இந்திய மீனவர்கள் எதிர்கொள்ளும் பாதுகாப்பு பிரச்சினைகளை தீர்க்க, சமூகத் தொடர்பு நிகழ்ச்சிகள் இந்திய கடலோர காவல் படை மற்றும் மீனவ அலுவலர்களால் நடத்தப்பட்டு வருகின்றன.
இத்திட்டத்தின் ஒரு பகுதியாக கடலில் ஏற்படும் பாதுகாப்பு பிரச்சனைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மீனவர்கள் கடலில் செல்லும்போது, உயிர் காக்கும் கருவிகளையும், அடையாள அட்டைகளையும் எடுத்துச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு இணை அமைச்சர் தெரிவித்தார்.
முன்னதாக பேராசிரியரும், கவிஞருமான தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி, கடலோர காவல் நிலையங்கள் கட்டுவதற்கு, அதிவேக பைபர் படகுகள் வாங்குவதற்கு, கடலோர பாதுகாப்பு திட்டத்தின் கீழ் நீர் பைக்குகள் வாங்குவதற்கு அரசாங்கம் ஒதுக்கிய நிதித்தொகை பற்றி கேள்வி எழுப்பியிருந்தார்.
இதில் அவர், தமிழகக் கடலோரப் பகுதிகளில், இந்திய மீனவர்கள் எதிர்கொள்ளும் பாதுகாப்புப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் விவரங்கள் கேட்டிருந்தார்.