

அடுத்த மாதம் முதல் மயிலாடுதுறை மாவட்டம் தனி மாவட்டமாகச் செயல்படும் என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்காவில் புதிதாக அரசு கலைக் கல்லூரி தொடங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். இந்த ஆண்டே கல்லூரி தொடங்க உத்தரவிட்டுள்ளதால், தற்காலிகமாக கல்லூரி தொடங்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள, மயிலாடுதுறை அடுத்த தேரழந்தூர் கம்பர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நேற்று (செப். 20) ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
"மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண்மை திருத்தச் சட்டத்தை விவசாயிகளுக்கு ஏற்புடைய திட்டமாகவே நாங்கள் பார்க்கிறோம். விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை உண்டு. கூடுதலாக விற்பனை வாய்ப்புள்ள இடங்களுக்கு விவசாயிகள் தாங்கள் விளைவித்த விளைபொருட்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று பிரதமர் அறிவித்திருக்கிறார். இதை விவசாயி என்ற முறையில் வரவேற்கிறேன்
வேளாண் மசோதா குறித்து ப.சிதம்பரம் அறியாமல் பேசுகிறார். அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அரசாங்கம் அதிக விலைக்குக் கொள்முதல் செய்யும்போது, விவசாயிகள் தனியாரிடம் தங்கள் உற்பத்திப் பொருளை விற்க முன்வர மாட்டார்கள். விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த விளைபொருட்களை நஷ்டத்திற்கு கொடுக்கக் கூடாது என்பதற்காகத்தான் விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச ஆதார விலையை உருவாக்கியிருக்கிறோம். அடுத்த மாதம் முதல் மயிலாடுதுறை மாவட்டம் தனி மாவட்டமாகச் செயல்படும்".
இவ்வாறு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்தார்.
பேட்டியின்போது நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி.நாயர், மயிலாடுதுறை மாவட்ட தனி அலுவலர் லலிதா, எம்எல்ஏக்கள் பவுன்ராஜ், ராதாகிருஷ்ணன், பாரதி மற்றும் பலர் உடனிருந்தனர்.