

தூத்துக்குடியில் முன் விரோதம் காரணமாக கடத்திக் கொலை செய்யப்பட்ட இளைஞர் கொலையில், சம்பந்தப்பட்ட அதிமுக பிரமுகரை அதிமுகவிலிருந்து நீக்கி ஓபிஎஸ்-இபிஎஸ் உத்தரவிட்டுள்ளனர்.
தூத்துக்குடி, தட்டார்மடம் அருகே உள்ள சொக்கன் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் செல்வன். இவர் அந்தப் பகுதியில் தண்ணீர் கேன் வியாபரம் செய்து வந்தார். செல்வனுக்கும் உசரத்துக் குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த மகராஜன் என்ற அதிமுக பிரமுகர் திருமணவேல் என்பவருக்கும் இடத்தகராறு தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது.
கடந்த 17-ம் தேதி உறவினர் வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த செல்வனை சிலர் காரில் கடத்தி, தாக்கி, கொலை செய்துள்ளனர். தட்டார்மடம் அருகே உள்ள காட்டுப் பகுதியில் செல்வனின் உடலை வீசி விட்டுக் கொலையாளிகள் தப்பிவிட்டனர்.
செல்வனின் மரணத்தில் தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணனுக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறி உறவினர்கள் உடலை வாங்க மறுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தக் கொலைச் சம்பவத்தில் தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன், அதிமுக பிரமுகர் திருமணவேல் உட்பட மேலும் சிலர் மீது (107, 336, 302, 364) உள்ளிட்ட 4 பிரிவுகளில் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர்களை போலீஸார் தேடி வந்தனர்.
இந்நிலையில் போலீஸாரால் தேடப்பட்டு வந்த அதிமுக பிரமுகர் திருமணவேல், முத்துகிருஷ்ணன் ஆகிய இருவரும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இந்நிலையில் அதிமுக தூத்துக்குடி தெற்கு மாவட்ட வர்த்தக அணிச் செயலாளர் திருமணவேலை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கி ஓபிஎஸ்-இபிஎஸ் இன்று அறிவித்துள்ளனர்.
இதுகுறித்த அறிவிப்பு:
“கட்சியின் கொள்கை-குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணாகச் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாலும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட வர்த்தகர் அணிச் செயலாளர் திருமணவேல் இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுகிறார். அவருடன் கட்சியினர் யாரும் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது”.
இவ்வாறு ஓபிஎஸ்-இபிஎஸ் தெரிவித்துள்ளனர்.