Published : 21 Sep 2020 01:35 PM
Last Updated : 21 Sep 2020 01:35 PM

பெண்களே இயக்கும் சூரிய சக்தி, எலக்ட்ரிக் ஆட்டோ: முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்

சென்னை

தனியார் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட மின்சாரம் மற்றும் சூரிய சக்தி மூலம் இயங்கும் 13 வடிவங்களிலான புதிய ஆட்டோக்களை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

“வெளிநாட்டு முதலீட்டாளர்களிடமிருந்து தமிழ்நாட்டிற்கு அதிக அளவில் நவீன தொழில்நுட்பங்கள் நிறைந்த முதலீடுகளை ஈர்த்திட, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய் ஆகிய நாடுகளுக்கு முதல்வர் கடந்த ஆண்டு அரசு முறைப் பயணம் மேற்கொண்டு 8,835 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான முதலீடுகளை ஈர்த்து, சுமார் 35,520-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 41 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டார்கள்.

இப்பயணத்தின் போது, துபாயில் நடைபெற்ற முதலீட்டாளர் சந்திப்பில், பெட்ரோல் ஆட்டோக்களை சுற்றுச்சூழலுக்கு உகந்த மின்சார ஆட்டோக்களாக மாற்றி இயக்கும் திட்டத்திற்காக 100 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 5,000 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், துபாயின் M Auto Electric Mobility நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, தற்போது, M Auto Electric Mobility நிறுவனம், 140 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 5,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், மின்சாரம் மற்றும் சூரிய சக்தி மூலம் இயங்கும் 13 வடிவங்களில் புதிய ஆட்டோக்களை உருவாக்கி அறிமுகப்படுத்தியுள்ளது. இப்புதிய ஆட்டோக்களை முதல்வர் இன்று கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

இந்த ஆட்டோக்களில், சிசிடிவி கேமரா, ஜிபிஎஸ் வசதி, ஆபத்து பொத்தான் (Panic Button), டாப் (TAB) போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன. M Electric Auto-க்களின் ஓட்டுநர்களில் பெரும்பான்மையானவர்கள் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியில், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், தொழில் துறை அமைச்சர் எம்.சி. சம்பத், தொழில்துறை முதன்மைச் செயலாளர் முருகானந்தம் தனியார் குழுமத்தின் தலைவர் மன்சூர்அலிகான், நிர்வாக இயக்குநர் யாஸ்மின் ஜவஹர் அலி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்”.

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x