Last Updated : 21 Sep, 2020 12:07 PM

 

Published : 21 Sep 2020 12:07 PM
Last Updated : 21 Sep 2020 12:07 PM

சமஸ்கிருதம் தவிர ஆதிமொழி இந்தியாவில் இல்லையா? மத்திய கலாச்சாரத்துறையின் அறிஞர்கள் குழு மீது மக்களவையில் சு.வெங்கடேசன் கேள்வி

சமஸ்கிருதம் தவிர ஆதிமொழி இந்தியாவில் இல்லையா? என மத்திய அரசிடம் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு எம்.பி.யான சு.வெங்கடேசன் சராமரி கேள்வி எழுப்பினார். மத்திய கலாச்சாரத்துறையின் அறிஞர்கள் குழு குறித்து இன்று மக்களவையில் அவர் பேசினார்.

இது குறித்து மதுரை தொகுதி எம்.பியான சு.வெங்கடேசன் மக்களவை பூஜிய நேரத்தில் பேசியதாவது:

இந்திய பண்பாட்டின் தோற்றம் மற்றும் பரிமாணத்தை ஆய்வு செய்வதற்காக 16 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இதை கேள்வி ஒன்றுக்கு கலாச்சாரத்துறை அமைச்சர் பதில் சொல்லியிருக்கிறார்.

இந்தக்குழுவில் பன்மைத்தன்மை இல்லை. தென்னிந்திய மற்றும் வடகிழக்கு இந்தியப் பகுதியினர் சேர்க்கப்படவில்லை. சிறுபான்மையினர், தலித் மற்றும் பெண்களும் கூட அக்குழுவில் இடம்பெறவில்லை.

மாறாக, இந்து உயர்சாதியை சேர்ந்தவர்கள் மட்டுமே இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர். மத்திய அரசு செம்மொழி என்று தமிழ் மொழியை அங்கீகரித்துள்ளது. இருப்பினும், தென்னிந்திய மொழிகளின் ஆய்வாளர்கள் யாருக்கும் ஆக்குழுவில் இடமில்லை.

ஆனால், மத்திய அரசு அமைத்த அந்த குழுவில் சாதிசங்க தலைவருக்கு மட்டும் இடமளிக்கப்பட்டுள்ளது. விந்திய மலைக்கு கீழே இந்தியா இல்லையா? வேத நாகரிகத்தினைத் தவிர வேறு நாகரிகம் இல்லையா? சமஸ்கிருதத்தை தவிர ஆதி மொழி இங்கு இல்லையா?

ஜான் மார்ஷல், சுனித்குமார் சட்டர்ஜி துவங்கி ஐராவதம் மகாதேவன், டோனி ஜோசப், ஆர்.பாலகிருஷ்ணன் வரையிலான ஆய்வாளர்களின் கண்டுபிடிப்புகள் அனைத்தையும் நிராகரித்து புராணங்களையே வரலாறு என நிறுவுவதற்கே இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

எப்படி மண்ணுக்குள் இருக்கும் வேர்களை விமானங்களில் பறந்துகொண்டு பார்க்க முடியாதோ அதேபோல, இந்த மண்ணின் பண்பாட்டினை சாதியத்தின் பீடங்களில் உட்கார்ந்திருப்பவர்களால் ஒரு போதும் எழுத முடியாது. எனவே இந்தக்குழுவை கலைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x