Published : 21 Sep 2020 12:09 PM
Last Updated : 21 Sep 2020 12:09 PM

அனிதா ராதாகிருஷ்ணன் வாகனம் மீது தாக்கு;  உட்கட்சி மோதலில் கவனம் செலுத்தும் முதல்வர் சட்டம் ஒழுங்கையும் கவனிக்க வேண்டும்: கனிமொழி விமர்சனம் 

உட்கட்சி மோதல்களில் முழுகவனத்தையும் செலுத்தும் முதல்வர், சட்டம் ஒழுங்கையும் கவனிப்பாரா ? என அனிதா ராதாகிருஷ்ணன் வாகனம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி, தட்டார்மடம் அருகே உள்ள சொக்கன் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் செல்வன். இவர் அந்த பகுதியில் தண்ணீர் கேன் வியாபரம் செய்து வந்தார். செல்வனுக்கும் உசரத்துக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த மகராஜன் என்ற அதிமுக பிரமுகர் திருமணவேலு என்பவருக்கும் இடத்தகராறு தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது.

கடந்த 17-ம் தேதி உறவினர் வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த செல்வனை சிலர் காரில் கடத்தி தாக்கி கொலை செய்து தட்டார்மடம் அருகே உள்ள காட்டுப் பகுதியில் உடலை வீசி விட்டு கொலையாளிகள் தப்பிவிட்டனர்.

செல்வனின் மரணத்தில் தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணனுக்கு தொடர்பு இருப்பதாக கூறி உறவினர்கள் உடலை வாங்கமறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கொலை சம்பவத்தில் தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன், அதிமுக பிரமுகர் திருமணவேல் உட்பட மேலும் சிலர் மீது (107, 336, 302, 364) உள்ளிட்ட 4 பிரிவுகளில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் கொலையாளிகளை கைது செய்யக்கோரி திமுக மாவட்டச்செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் வலியுறுத்தி வந்தனர். போராட்டம் நடத்திய செல்வனின் உறவினர்களை திருச்செந்தூர் திமுக எம்எல்ஏ, அனிதா ராதாகிருஷ்ணன் சந்தித்து ஆறுதல் தெரிவித்துவிட்டு வீடு திரும்பிய நிலையில் அவரது வாகனம் மர்ம நபர்களால் தாக்கப்பட்டது.

இதுகுறித்து தூத்துக்குடி எம்.பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். அவரது முகநூல் பதிவு வருமாறு:
“தூத்துக்குடி மாவட்டம் ஶ்ரீவைகுண்டத்தை சேர்ந்த, செல்வன் என்பவர் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக தட்டார்மடம் காவல் நிலைய ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவர் இன்னமும் கைது செய்யப்படவில்லை.

ரவுடிகளை கைது செய்ய வேண்டிய காவல்துறையே ரவுடிகளின் கூடாரமாகி விட்டதோ என்ற ஐயம் எழுகிறது. உள்துறைக்கு பொறுப்பான முதல்வரின் கட்டுப்பாட்டில் காவல்துறை இருக்கிறதா இல்லையா ?
முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அனிதா ராதாகிருஷ்ணனின் வாகனத்தை நேற்று இரவு பயங்கர ஆயுதங்களோடு வந்த மர்ம நபர்கள் தாக்கி சேதப்படுத்தியுள்ளனர்.

காவல்துறையினரே கூலிப்படையினர் போல செயல்படுவதால், ரவுடிகள் அச்சமின்றி குற்றச்செயல்களில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். உட்கட்சி மோதல்களில் முழுகவனத்தையும் செலுத்தும் முதல்வர், சட்டம் ஒழுங்கையும் கவனிப்பாரா ?”

எனக்கேள்வி எழுப்பியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x