Last Updated : 21 Sep, 2020 12:25 PM

 

Published : 21 Sep 2020 12:25 PM
Last Updated : 21 Sep 2020 12:25 PM

சேலம் - சென்னை எட்டு வழிச்சாலைத் திட்டத்தைக் கைவிடுக; நாடாளுமன்றத்தில் பொன்.கௌதம சிகாமணி வலியுறுத்தல்

சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்தைக் கைவிட வேண்டும் என்றும் அதற்குப் பதிலாக ஏற்கெனவே உள்ள மூன்று நெடுஞ்சாலைகளை அகலப்படுத்தி அவற்றைப் பயன்படுத்த வேண்டும் என்றும் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.கௌதமசிகாமணி நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார்.

377-வது விதியின் கீழ் நாடாளுமன்றத்தில் அவர் பேசியதாவது;
"சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை என்பது பல்லாயிரக்கணக்கான மக்களின் விவசாய நிலங்களை அழித்து, வாழ்வாதாரங்களை ஒழித்து, நீர்நிலைகளைச் சூறையாடி, மலைகளைக் குடைந்து, மேய்ச்சல் நிலங்களைத் தார் சாலையாக்கி, மரங்களை அழித்து, காட்டு விலங்குகளின் வாழ்விடங்களை, வழித்தடங்களைக் காணாமல் ஆக்கி, இயற்கையின் சமன் நிலையை ஒழித்துக் கட்டும் என்பது ஊரறிந்த ரகசியம்.

சேலம் - சென்னை இடையே ஏற்கெனவே மூன்று நெடுஞ்சாலைகள் இருக்கின்றன. NH-48, NH-2 சாலையானது சென்னை - காஞ்சிபுரம் - கிருஷ்ணகிரி- தருமபுரி வழியாகச் சேலத்திற்கு 352.7 கிலோமீட்டர் நீளத்தில் நான்கு வழி, ஆறு வழிச்சாலையாக உள்ளது. NH-48 மற்றும் SH-18 சாலையானது 331.89 கிலோ மீட்டர் இரண்டு வழி, நான்கு வழிச்சாலையாக உள்ளது. NH-32 சாலையானது சென்னை - விழுப்புரம் வழியாக 334.28 கிலோமீட்டர் நீளத்தில் இரண்டு வழி, நான்கு வழிச் சாலையாக இருக்கிறது.

மேலும், கரோனா பொதுமுடக்கத்தால் தொழில்கள் பாதிப்படைந்து மக்கள் கடும் பொருளாதார நட்டத்தில் இருக்கும் இச்சூழலில் எட்டு வழிச்சாலைக்காக ரூ.10 ஆயிரம் கோடியை விரயம் செய்வது எந்தச் சூழலிலும் ஏற்புடையதல்ல. அதுமட்டுமன்றி இந்தத் திட்டம் பல்லாயிரம் ஏக்கர் விளைநிலங்களையும் விவசாயிகள் வாழ்வாதாரத்தையும் சீரழிப்பதோடு இந்த திட்டத்திற்காக லட்சக்கணக்கான மரங்களும் வெட்டி வீழ்த்தப்படும்.

இந்தத் திட்டம் சேலம், தருமபுரி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம் மாவட்டங்களிலுள்ள மக்களின், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழித்து அவர்களை நடுத்தெருவுக்குக் கொண்டு வந்து விடும். எனவே, எட்டு வழிச்சாலைக்குப் பதிலாக ஏற்கெனவே சென்னைக்கும் சேலத்திற்கும் இடையேயுள்ள மூன்று சாலைகளை விரிவாக்கம் செய்து பயன்படுத்த வேண்டும். புதிதாக அமைக்க உத்தேசித்துள்ள சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்தைக் கைவிட வேண்டும்."

இவ்வாறு கௌதமசிகாமணி பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x