ஜோலார்பேட்டை அருகே துணிகரம்: ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி காவல் துறையினர் விசாரணை

கண்காணிப்பு கேமராவில் பதிவான மர்ம நபரின் உருவம்.
கண்காணிப்பு கேமராவில் பதிவான மர்ம நபரின் உருவம்.
Updated on
1 min read

ஜோலார்பேட்டை அருகே ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்ற நபரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

ஜோலார்பேட்டை புது ஓட்டல் தெருவில் ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கி சார்பில் ரயில்வே நிலையம், பேருந்து நிறுத்தம், சந்தைகோடியூர் உள்ளிட்ட பகுதிகளில் ஏடிஎம் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சந்தைகோடியூர் பகுதியில் உள்ள ஏடிஎம் மையத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12.25 மணிக்கு எச்சரிக்கை அலாரம் ஒலிக்கும் சத்தம் கேட்டது. இதுகுறித்து பொது மக்கள் அளித்த தகவலின் பேரில் ஜோலார்பேட்டை காவல் துறையினர் அங்கு விரைந்து சென்று பார்த்தபோது ஏடிஎம் மையத்தில் இருந்த இயந்திரம் இரும்பு கம்பியால் உடைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, வங்கி ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு எச்சரிக்கை அலாரம் நிறுத்தப்பட்டது. பிறகு, அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராவில் ஆய்வு செய்த போது, முகமூடி அணிந்த நபர் ஒருவர் இரவு 12 மணிக்கு ஏடிஎம் மையத்துக்குள் நுழைந்து இரும்பு கம்பியால் இயந்திரத்தை உடைத்த போது, எச்சரிக்கை அலாரம் சத்தம் எழுப்பியதால் அந்த நபர் அங்கிருந்து தப்பியோடிய காட்சி பதிவாகியிருந்தது.

இதுகுறித்து வங்கி ஊழியர்கள் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை வைத்து ஏடிஎம் மையத்தில் கொள்ளையடிக்க முயன்ற நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in