

ஏற்காட்டில் நேற்று குளிர்ந்த சீதோஷ்ணநிலை நிலவியதால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக மக்கள் வெளியூர்களுக்கு செல்ல முடியாமல் வீடுகளிலேயே இருந்தனர். இந்நிலையில், ஊரடங்கில் தளர்வுகளை அரசு அறிவித்தது. குறிப்பாக வெளி மாவட்டங்களுக்குச் செல்ல இ-பாஸ் தேவையில்லை என்ற அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இருப்பினும், ஏற்காடு உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு வெளிமாவட்டங்களில் இருந்து வரும் பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை நாளான நேற்று, காலை முதலே ஏராளமான கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் பயணிகள் ஏற்காட்டுக்கு வந்தனர்.
ஏற்காட்டில் நேற்று குளிர்ந்த சீதோஷ்ண நிலையும், பனிமூட்டமும் நிலவியது. மேலும், சாரல் மழையும், எதிரே இருப்பவர் கூட தெரியாத வகையில் சில்லென்ற மூடுபனியும் இருந்ததால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
வெளிமாவட்டத்தில் இருந்து இ-பாஸ் இல்லாமல் வந்தவர்களை மலை அடிவாரத்தில் உள்ள சோதனைச் சாவடியில் போலீஸார் கண்காணித்தனர். இ-பாஸ் வைத்திருப்பவர்கள் மட்டும் ஏற்காட்டுக்கு செல்ல அனுமதித்தனர். இதனால், இ-பாஸ் இல்லாமல் வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
பயணிகள் வருகை அதிகரித்து இருந்ததால் இ-பாஸ் சோதனை செய்வதில் போலீஸார் சிரமத்துக்குள்ளாகினர். மேலும், வாகனங்கள் அணிவகுத்து நின்றதால், போக்குவரத்து நெரில் ஏற்பட்டது. விடுமுறை நாட்களில் சோதனைச் சாவடியில் கூடுதல் போலீஸாரை நியமிக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.