

நீலகிரி மாவட்டத்தில் கடந்த மாதம் பெய்த கனமழையால் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. மழையின் தீவிரம் குறைந்து, மாவட்டம் இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் தொடர் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. இதனால், அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
கடந்த சில நாட்களாக மழை தீவிரமடைந்துள்ளது. பகல் நேரத்திலேயே கடும் குளிர் நிலவுகிறது. இதனால், மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.கடும் பனிமூட்டத்தால் பகல் நேரங்களிலேயே வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி இயக்கப்படுகின்றன. சுற்றுலாப் பயணிகள் வருகை இல்லாமல், பூங்காக்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
மழை அளவு (மி.மீ.)
நேற்று காலை வரையிலான 24 மணி நேர நிலவரப்படி, அதிகபட்சமாக அவலாஞ்சியில் 205 மில்லி மீட்டர் மழைப் பதிவானது. அப்பர் பவானி - 128, தேவாலா - 110, எமரால்டு - 44, நடுவட்டம் - 38, கூடலூர் -33, குந்தா - 20, கெத்தை - 9, கிளன்மார்கன் - 7, உதகை - 6.6, குன்னூர்- 3, கோத்தகிரி - 3.