

குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பூத்துக்குலுங்கும் ‘ஸ்பேத்தோடியா’ எனும் துலிப் வகை மலர்களால், மலைப்பாதை சிவப்பு கம்பளம் விரித்ததுபோல காணப்படுகிறது.
இயற்கை எழில் சூழ்ந்த நீலகிரி மாவட்டத்தின் குன்னூர் சுற்றுப்புறப் பகுதிகளில், மலைகளுக்கு இடையே பூத்துக்குலுங்கும் பல வண்ண மலர்கள், சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்கின்றன.
இவற்றில், ‘ஸ்பேத்தோடியா கம்முலேட்டா’ என்ற தாவரவியல் பெயர் கொண்ட மரங்களும் அடக்கம். இவை, ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவை என்பதால் ’ஆப்பிரிக்கன் துலிப்’ என்றும் அழைக்கப்படுகின்றன.
இந்நிலையில், இந்த மலர்களின் சீசன் தற்போது குன்னூர் பகுதிகளில் தொடங்கியுள்ளது. புறநானூறு, அகநானூறு உள்ளிட்ட தமிழ் இலக்கியங்களில் ‘பட்டடி’ எனும் பெயரில் இந்தசெந்நிற மலர்கள் இடம்பெற்றுள்ளன. ஆப்பிரிக்க பழங்குடியினர், இவற்றை மருந்தாகவும் பயன்படுத்துகின்றனராம்.
செந்நிற மலர்கள்
மேலும், பல்வேறு மருத்துவப் பலன்களையும் கொண்டுள்ள இந்த மரத்தின் பட்டையைக் கொதிக்கவைத்து, காய்ச்சல், நீரிழிவு நோய்களுக்கு பயன்படுத்தலாம். இவற்றின் இலைகளிலிருந்தும், பூக்களிலிருந்தும் பிரிக்கப்படும் சில மூலக்கூறுகளுக்கு சரும வியாதிகளையும், காயங்களையும் ஆற்றும் சக்தி உண்டு என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
ஆரம்ப நிலை மலேரியாவைத் தடுக்க, இந்த மரப்பட்டையின் கசாயம் வெகுவாக உதவுகிறது என்றும், சமீபத்திய விஞ்ஞான சோதனைகள் தெரிவிக்கின்றன. இப்படி பல்வேறு மருத்துவ குணம் நிரம்பிய இந்த மரங்கள், ஆண்டுதோறும் டிசம்பர் தொடங்கி பிப்ரவரிமாதம் வரையிலும், ஆகஸ்ட் தொடங்கி அக்டோபர் மாதம் வரையிலும் பூத்துக்குலுங்கும். சிவப்பு நிறத்தில் கொத்து, கொத்தாய் மலர்ந்துள்ள இந்த மலர்களால், குன்னூர் மலைப்பாதை சிவப்பு கம்பளம் விரித்ததுபோல காட்சியளிக்கிறது. இது சுற்றுலாப்பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.