Published : 21 Sep 2020 08:14 AM
Last Updated : 21 Sep 2020 08:14 AM

கரோனாவால் உயிரிழந்த மருத்துவர்களுக்கு அரசு அறிவித்த நிவாரணம் வழங்கவில்லை: ஐ.எம்.ஏ. தலைவர் குற்றச்சாட்டு

ஈரோடு

கரோனாவால் உயிரிழந்த மருத்துவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் அறிவித்த நிவாரணத் தொகையை இதுவரை வழங்கவில்லை என இந்திய மருத்துவ சங்கத்தின் மாநிலத் தலைவர் சி.என்.ராஜா தெரிவித்தார்.

இதுகுறித்து ஐ.எம்.ஏ. மாநிலத் தலைவர் சி.என்.ராஜா ஈரோட்டில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்திய மருத்துவ சங்கத்தின் ஈரோடு கிளையின் சார்பில், அனைத்து மருத்துவர்களும் இணைந்து கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையை தொடங்கி உள்ளோம். தமிழ்நாடு மருத்துவ சங்கத்தின் வழிகாட்டுதலின் படி, அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இம்மருத்துவமனையில், அரசு நிர்ணயித்த கட்டணத்தை வசூலிக்க இருக்கிறோம்.

நாடு முழுவதும் 370 மருத்துவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், தமிழகத்தில் மட்டும் 63 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மருத்துவர்களுக்கு, மத்திய, மாநில அரசுகள் அறிவித்த நிவாரணத் தொகை இதுவரை வழங்கப்படவில்லை. அரசு அறிவித்த நிவாரணத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.

மேலும், கரோனா தொற்றால் இறந்த மருத்துவர்களுக்கு, ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படுவதுபோல மரியாதை அளிக்க வேண்டும்.

கரோனா தொற்றினைக் கட்டுப்படுத்த ஊரடங்கு தேவையற்றது. ஊரடங்கால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மருத்துவமனை பாதுகாப்புச் சட்டம் அமலில் உள்ளது. இதனை மேலும் வலுப்படுத்த வேண்டும். கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க, அரசு நிர்ணயித்துள்ள கட்டணம் போதுமானதாக இல்லை. இக்கட்டணத்தை அரசு உயர்த்த வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x