Published : 21 Sep 2020 08:12 AM
Last Updated : 21 Sep 2020 08:12 AM

108 ஆம்புலன்ஸ் வாகனங்களை கையாள தனி செயலி: அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தகவல்

108 ஆம்புலன்ஸ்களை கையாளுவதற்கென தனியாக செயலி அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற கரோனா தடுப்பு பணி குறித்த ஆய்வுக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

தமிழகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 2.50 லட்சத்துக்கும் மேற்பட்டோர், கரோனா 108 சிறப்பு ஆம்புலன்ஸ்கள் மூலம் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் வாகனங்களை கையாளுவதற்காக தனி செயலி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் அவசர உதவிக்கு அழைக்கப்பட்ட ஆம்புலன்ஸ் எந்த இடத்தில் வருகிறது? எவ்வளவு நேரத்தில் வரும்? என்பன போன்ற விவரங்களை தெரிந்து கொள்ள முடியும்.

ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தமிழகத்தில் கரோனாவால் பதற்றமோ, பீதியோ இல்லாத சூழலை ஏற்படுத்தும் வகையில் வலுவான மருத்துவக் கட்டமைப்புகளை முதல்வர் உறுதி செய்துள்ளார். அதற்கான சான்றுதான், இந்தியாவிலேயே சிறந்த கரோனா சிறப்பு மருத்துவமனைக்கான விருதை சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை பெற்றுள்ளது.

99% வாய்ப்பு இல்லை

கரோனா தடுப்பு பணியை அரசு பார்த்துக்கொள்ளும் என்ற நம்பிக்கையும், நம்மை நாம் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்ற எச்சரிக்கை உணர்வும் பொதுமக்களுக்கு வேண்டும். ஒருமுறை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 99 சதவீதம் பேருக்கு மறுமுறை கரோனா தொற்றால் பாதிக்க வாய்ப்பு இல்லை. கரோனா தடுப்பூசி பரிசோதனை தொடர்பாக விருப்பம் தெரிவித்துள்ளவர்களை அழைக்கும் பணி இந்த வாரத்தில் தொடங்கும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x