Published : 21 Sep 2020 07:46 AM
Last Updated : 21 Sep 2020 07:46 AM

‘இந்து தமிழ் திசை’ சார்பில் வழிகாட்டி நிகழ்ச்சி; திட்டமிட்டு செயல்பட்டால் சுயதொழிலிலும் பெண்கள் சாதிக்கலாம்: இணைய வழி கலந்துரையாடலில் வல்லுநர்கள் ஆலோசனை

நம்பிக்கையோடு திட்டமிட்டு செயல்பட்டால், சுயதொழிலிலும் பெண்கள் சாதிக்க முடியும் என்று ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் ‘பெண் இன்று’ நடத்திய சுயதொழில் வழிகாட்டி நிகழ்ச்சியில் துறை வல்லுநர்கள் தெரிவித்தனர்.

கரோனா ஊரடங்கு காலத்தில் பெரும்பாலான குடும்பங்கள் பொருளாதார ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. பலரும் வேலை இழந்த நிலையில், குடும்பத்தை நடத்துவதற்கே சிரமப்படுகின்றனர். இந்நிலையில், பெண்கள் சுயதொழில் செய்வதன் மூலம் குடும்பத்தின் பொருளாதார சீர்குலைவை ஓரளவுக்கு சரிசெய்ய முடியும்.

இதை கருத்தில் கொண்டு, பெண்கள் வீட்டில் இருந்தபடியே சுயதொழில் செய்து பொருளீட்டு வதற்கான வழிமுறைகள் குறித்த இணையவழி கலந்துரையாடல் நிகழ்ச்சி, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் ‘பெண் இன்று’ சார்பில் ‘வாழ நினைத்தால் வாசல் திறக்கும்’ எனும் தலைப்பில் கடந்த 19-ம் தேதி நடைபெற்றது. இதில், நிபுணர்கள் கூறியதாவது:

சிறு, குறு, நடுத்தர தொழில் மேம்பாட்டு நிறுவன துணை இயக்குநர் எஸ்.தர்மசெல்வன்:

பெண்கள் சுயதொழில் செய்ய இன்று பல்வேறு வாய்ப்புகள் உள்ளன. சுயதொழில் செய்யும் பெண்களை ஊக்குவிக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களையும், தொழில் செய்வதற்கான முதலீட்டுக்கு கடனுதவியையும் வழங்குகின்றன. சுயதொழில் செய்ய விரும்பும் பெண்கள் தனியாக இதில் ஈடுபட உள்ளோமா, அல்லது பங்குதாரராக யாரையேனும் சேர்த்துக்கொள்ளப் போகிறோமா என்பதை முதலில் முடிவு செய்துகொள்ள வேண்டும். பிறகு, தாங்கள் செய்ய விரும்பும் தொழில் குறித்து ஒரு திட்ட அறிக்கை தயாரிக்க வேண்டும்.

தொடங்க உள்ள தொழிலுக்கான இடம், தேவையான இயந்திரங்கள், மின்கட்டணம், தயாரிக்கும் பொருட்களுக்கான சந்தை வாய்ப்பு நிலவரம் ஆகியவை பற்றி சரியான புரிதலும், தெளிவும் இருக்க வேண்டும். முத்ரா, வேலை இல்லாதவர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (UYEGP), பிரதமரின் வேலைவாய்ப்பு திட்டம் (PMEGP), புதிய தொழில்முனைவோர், தொழில் நிறுவனம் மேம்பாட்டு திட்டம் (NEEDS) என பல திட்டங்கள் உள்ளன. இதில், நீங்கள் தொடங்க உள்ள தொழிலுக்கு ஏற்ற முதலீடு எந்த திட்டத்தில் கிடைக்கும், அதற்கான மானியம் எவ்வளவு என்பது உள்ளிட்ட தகவல்களை அறிந்துகொண்டு, அதற்கேற்ப வங்கி கடனுதவியை நாடலாம். நம்பிக்கையோடு திட்டமிட்டு உழைத்தால் சுயதொழிலிலும் பெண்கள் சாதிக்கலாம்.

தஞ்சை ஜனசேவா பவன் செயலாளர், இயக்குநர் எஸ்.சியாமளா:

ஒரு குடும்பத்தின் பொருளாதார நெருக்கடி பெண்களையே பெரிதும் பாதிக்கிறது. இன்றைய சூழலில் பெண்கள் சுயதொழில் தொடங்க முன்வருவதன் மூலம், பொருளாதார சிக்கலில் இருந்து அவர்கள் விடுபட முடியும். ஒரு பொருளை உற்பத்தி செய்வதைவிட, அதை விற்பனை செய்வது எப்படி என்பது பற்றிய தெளிவு முக்கியம். இலக்கை நிர்ணயித்துக்கொண்டு திட்டமிட்டு தொழில் தொடங்கினால், சுயதொழில் செய்யும் பெண்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும்.

கோயம்புத்தூர் பிவிஆர் ஃபுட்ஸ் நிறுவனர் ஆர்.சுபத்ரா:

கல்லூரியில் 15 ஆண்டுகளாக பணியாற்றிய நான், ‘வேலை தேடுபவராக இல்லாமல், வேலை கொடுப்பவராக இரு’ என்று எனது மாணவர்களுக்கு சொல்வது உண்டு அதை நாமே செய்தால் என்ன என்ற எண்ணத்தில்தான், சிறுதானிய உணவுப் பொருட்கள் தயார் செய்யும் தொழிலை தொடங்கி னேன். எதை செய்தாலும், பயன் படுத்துபவர்களுக்கு அது நல்ல பயனை தர வேண்டும் என்ற எண்ணத்தில் தொழில் தொடங்கி னால், நிச்சயம் வெற்றி பெற முடியும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

நிகழ்வில் பங்கேற்றவர்களின் கேள்விகள், சந்தேகங்களுக்கும் வல்லுநர்கள் விளக்கம் அளித்தனர். இந்த நிகழ்வை ‘இந்து தமிழ் திசை’ உதவி செய்தி ஆசிரியர் பிருந்தா சீனிவாசன் தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியைக் காண தவறியவர்கள் https://www.youtube.com/watch?v=oblAZQ2R40M என்ற யூ-டியூப் லிங்க்கில் காணலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x