Published : 20 Sep 2020 17:22 pm

Updated : 20 Sep 2020 17:22 pm

 

Published : 20 Sep 2020 05:22 PM
Last Updated : 20 Sep 2020 05:22 PM

கரோனா பணியில் உயிரைப் பணயம் வைத்து உழைத்த தூய்மைப் பணியாளர்கள்: பணியிடை நீக்கம் செய்த சென்னை மாநகராட்சி: சிஐடியூ கண்டனம் 

cleaners-who-risked-their-lives-to-work-in-corona-dismissed-chennai-corporation-citu-condemnation

சென்னை

சென்னை மாநகராட்சியே கரோனா நோய்த் தொற்று பரவாமல் உயிரை பணயம் வைத்து உழைத்த தூய்மைப் பணியாளர்களை மனித தன்மையற்ற முறையில் பணியிடை நீக்கம் செய்துள்ளதாகவும், மீண்டும் பணி வழங்கவும், உரிய ஊதியம் வழங்கவும் கோரி செப்.23 சென்னையில் போராட்டம் நடத்த உள்ளதாக சிஐடியு வடசென்னை மாவட்டக்குழு தெரிவித்துள்ளது.

இது குறித்து வடசென்னை சிஐடியூ தலைவர் எஸ்.கே. மகேந்திரன் செயலாளர் சி. திருவேட்டை கூட்டாக வெளியிட்ட அறிக்கை:


200 வார்டுகள், 15 மண்டலங்கள், 22 சட்டப்பேரவை தொகுதிகள் என பிரிக்கப்பட்டு 426 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது பெருநகர சென்னை மாநகராட்சி . இங்கு சுமார் ஒருகோடி மக்கள் வாழ்கின்றனர். பல லட்சம் மக்கள் தினமும் வந்து போகின்றனர். இங்கு வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் இருந்து நாளொன்றுக்கு சுமார் 5800 டன் குப்பைகள் சேகரமாகிறது.

சென்னையை தூய்மைப் படுத்தி மக்களின் சுகாதாரத்தை காக்கும் பணியில் சுமார் 29,339 தொழிலாளர்கள் உள்ளனர். இவர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து கரோனா நோய் தொற்றை நேரடியாக எதிர்கொண்டு மக்கள் உயிரை காப்பாற்றியவர்கள். இப் பணியில் 19 தொழிலாளர்கள் கரோனா தொற்றுக்கு இலக்காகி மரணம் அடைந்தனர். இதில் 10 பேருக்கு அறிவிக்கப்பட்ட நிவாரணம் கூட. இன்னும் மாநகராட்சி நிர்வாகம் வழங்கவில்லை.

இத் தொழிலாளர்களில் 6400 பேர் மட்டுமே நிரந்தர தொழிலாளர்கள்.இணைக்கப்பட்ட நகராட்சி, பேரூராட்சிகளல் 16 வருடத்திற்குமேல் வேலை செய்து சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டவர்கள் 509 பேர் இன்னும் நிரந்தரப்படுத்தப்படாமல் NMR/ தொகுப்பூதிய தொழிலாளியாகவே உள்ளனர். மாநகராட்சி இணைப்பின் போது இவர்களுடன் வேலைசெய்து குடிநீர் வாரிய பணிக்கு சென்ற 350 பேர் பண நிரந்தரம் செய்யப்பட்டு விட்டனர்.

2000 ஆண்டிலிருந்து ஓனிக்ஸ், நீல்மெட்டல் பனால்கா ,CMSW ராம்கி, என பல பெயர்களில் தனியார் நிறுவனத்திற்கு மாநகராட்சி கான்ட்ராக்ட் கொடுத்துள்ளது. இதில் தற்போது சுமார் 4,500 மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர்.

இவர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.210/- வீதம் மாதம் 6200/- வழங்கி இந்நிருவனம் கொள்ளையடிக்கிறது. இதுபோக NULM - 9257, DBC- 2858 என மாநகராட்சியில் ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களுக்கு நாளொன்றுக்கு ரூ. 379/- மாநகராட்சி வழங்குகிறது.

செங்கொடி சங்கம் சிஐடியு பலகட்ட போராட்டங்கள் நடத்தியதன் விளைவாக தமிழக அரசு தூய்மைப் பணி தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு ரூ. 624/- குறைந்த பட்ச கூலி வழங்க வேண்டுமென 11/10/2017 எண் 62(2D) அரசாணை வெளியிட்டது.

சென்னை மாநகராட்சி நிர்வாகம் சட்டவிரோதமாக தமிழக அரசின் அரசாணையை அமலாக்கிட மறுக்கிறது. கரோனா கணக்கெடுப்பு பணிக்காக களப்பணியாளர்கள் 13000 பேரை எடுத்து நாளொன்றுக்கு ரூ. 500/- வழங்கும் மாநகராட்சி நிர்வாகத்தை எங்களுக்கும் ரூ. 500/- வது வழங்கு என கேட்டார்கள்.

வழங்குவதாக கூறிய மாநகராட்சி நிர்வாகம் அதை செய்யவில்லை. மேலும் உபேசா ஸ்மித் இன்டர்நேஷனல் என்கிற கம்பனிக்கு அக்டோபர் 1 லிருந்து கான்ட்ராக்ட் விட மாநகராட்சி நிர்வாகம் தீர்மானித்தது. 18 வயதிலிருந்து 45 வயதுக்குட்பட்டவர்களுக்குதான் வேலை என சொல்லப்பட்டது. இதனால் ஒப்பந்த தொழிலாளர்களின் வேலை பறிபோகும் என்ற அச்சத்தில் செப்- 7 தேதியன்று தொழிலாளர்கள் மாநகராட்சி முன்பு கூடி முறையிட்டனர்.

அவர்களின் குறைகளை தீர்ப்பதற்கு பதிலாக கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். செங்கொடி சங்க தலைவர் தோழர் எஸ். கே. மகேந்திரன், பொதுச் செயலாளர் பி. சீனிவாசலு, துணைப் பொதுச் செயலாளர்கள் டி.ராஜன்,ஜி.முனுசாமி,கே.தேவராஜ் ஆகியோர் மாநகராட்சி நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொழிலாளர்களின் வேலைபாதுகாப்பு, அரசாணைப்படி குறைந்த பட்ச ஊதியம் வழங்கிட வேண்டுமென வலியுறுத்தினர்.

நிர்வாகம் நாளொன்றுக்கு ரூ.12/- உயர்த்தியது. நிர்வாகம் கேட்டுக் கொண்ட அடிப்படையில் கரோனா காலம் என்பதால் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது. மாநகராட்சி நிர்வாகம் அளித்த வாக்குறுதிப்படி நடந்து கொள்ள வில்லை. தொழிலாளர்களுக்காக பேச்சுவார்த்தைக்கு சென்ற சங்க பொதுச் செயலாளர் பி.சீனிவாசலு, துணைப் பொதுச் செயலாளர்கள் டி.ராஜன் ஜி.முனுசாமி,கே. தேவராஜ் ஆகியோரை எந்த விசாரணையுமின்றி தற்காலிக பணியிடை நீக்கம் செய்துள்ளது.

மண்டல நிர்வாகிகள் குற்றச்சாட்டு குறிப்பாணை, நிரந்தர தொழிலாளர்கள் 500 க்கும் மேற்பட்டோருக்கு காரணம் கேட்கும் குறிப்பாணை வழங்கப்பட்டுள்ளது. சங்க நிர்வாகிகள் 291 பேர் வேலையை விட்டு நிறுத்தப் பட்டுள்ளனர். 714 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து வட்டங்களிலும் செங்கொடி சங்கத்தில் இல்லையென எழுதி கொடு என தொழிலாளர்கள் மிரட்டப்படுகின்றனர்.

மாநகராட்சி அதிகாரிகள் அப்பட்டமாக சட்டவிரோத நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். கான்ட்ராக்ட் தொழிலாளர்களாக பல ஆண்டுகாலம் வேலைசெய்த தொழிலாளர்களை வெளியேற்ற துடிக்கின்றனர். மக்களின் உயிர்காக்க தன் உயிரை பணயம் வைத்து துப்புரவு பணியை செய்த இந்த தொழிலாளர்களுக்கு பொதுமக்கள் பல இடங்களில் மாலை அணிவித்து, பாதபூசை செய்து மரியாதை செய்தனர்.

ஆனால், மாநகராட்சி நிர்வாகம் மனித தன்மையற்ற முறையில் இவர்களின் வாழ்கையை பறிக்கிறது. மாநகராட்சி தொழிலாளி விரோத போக்கை நிறுத்திக் கொள்ள வேண்டும். பழிவாங்கும் நடவடிக்கையை திரும்ப பெற்று அனைவருக்கும் வேலை வழங்கிட வேண்டும். தமிழக அரசு இதில் தலையிட வேண்டும் என வலியுறுத்தி செப்.23 அன்று மாநகராட்சி முன்பு கண்டன ஆர்பாட்டம் நடைபெறும்”.

இவ்வாறு சிஐடியூ செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவறவிடாதீர்!

Cleaners who risked their lives to work in CoronaDismissed Chennai CorporationCITU condemnationகரோனா பணிஉயிரைப் பணயம் வைத்து உழைத்த தூய்மைப்பணியாளர்கள்வேலை நீக்கம் செய்த சென்னை மாநகராட்சிசிஐடியூ கண்டனம்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x