பணி நிரந்தரம் இல்லை, பதவி உயர்வும் இல்லை: 20 ஆண்டாக போராடும் ரேஷன் கடை பணியாளர்கள்

பணி நிரந்தரம் இல்லை, பதவி உயர்வும் இல்லை: 20 ஆண்டாக போராடும் ரேஷன் கடை பணியாளர்கள்
Updated on
1 min read

தமிழகத்தில் பணி நிரந்தரம், பதவி உயர்வு இன்றி 20 ஆண்டுகளாக ஒரே நிலையில் 15 ஆயிரம் ரேஷன் கடை பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

தமிழகத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் கீழ் 32,909 ரேஷன் கடைகள் செயல்படுகின்றன. ரேஷன் கடை பணியாளர்களை அந்தந்த கூட்டுறவுச் சங்க நிர்வாக்குழுவே நியமனம் செய்து வந்தது. பின்னர் ரேஷன் கடை பணியாளர்களை வேலைவாய்ப்பு அலுவலகப் பரிந்துரை அடிப்படையில் நியமிக்க அரசு உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் 20 ஆண்டுகளுக்கு முன்பு கூட்டுறவுச் சங்க நிர்வாகக் குழுவால் நியமிக்கப்பட்ட சுமார் 15 ஆயிரம் ரேஷன் கடை பணியாளர்கள், தங்களை பணி நிரந்தரம் செய்ய தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இவர்களின் கோரிக்கைகளை அரசு ஏற்கவில்லை. இதனால் கடந்த 20 ஆண்டுகளாக இவர்கள் ஒரே நிலையிலேயே பணிபுரிகின்றனர். இவர்களுக்கு பதவி உயர்வும் கிடையாது. பணியாளர்கள் இறந்தால், குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்கும் சலுகையும் கிடையாது.

இதில் 50 சதவீதம் பேர் ஓய்வு வயதை நெருங்கி விட்டனர். அதற்குள் தங்களை பணி நிரந்தரம் செய்து, அனைத்து சலுகைகளையும் வழங்க வேண்டும் என அரசுக்கு மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போது மாநிலம் முழுவதும் ரேஷன் கடை பணியாளர்கள் புதிதாகத் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். தங்களை பணி நிரந்தரம் செய்த பிறகு காலி பணியிடங்களுக்கு புதிதாக ஆட்களை தேர்வு செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு மாநிலத் தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர் சங்கத் தென்மண்டலச் செயலர் ஆ.ம.ஆசிரியத்தேவன் கூறுகையில், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக குறைந்த ஊதியத்தில் எவ்வித சலுகைகளும் இன்றி ரேஷன் கடை பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்களின் குடும்பச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, தமிழக முதல்வர் கருணை அடிப்படையில் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in