Last Updated : 20 Sep, 2020 02:26 PM

 

Published : 20 Sep 2020 02:26 PM
Last Updated : 20 Sep 2020 02:26 PM

கரோனா தொற்றுக்கு முடிவு கட்டும் மூச்சுப்பயிற்சி

உலகையே அச்சுறுத்தும் கரோனாவை கட்டுப்படுத்த தடுப்பு மருந்துகளைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இருப்பினும், எந்த மருந்தும் இதுவரை பயன்பாட்டுக்கு வரவில்லை. மனிதர்களின் நுரையீரலைப் பாதிக்கும் இந்தத் தொற்றை மூச்சுப் பயிற்சியால் (பிராணயாமம்) வெல்ல லாம். அதனால்தான், சித்த மருத்துவர்கள் மட்டுமின்றி பலரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் மூச்சுப் பயிற்சி மேற்கொள்ள பரிந்துரை செய்கின்றனர்.

இது குறித்து மதுரை தியாகராசர் கல்லூரி உடற்கல்வித் துறை இயக்குநர் ஆர்.செல்வக்குமார் கூறியதாவது: கரோனா தொற்று ஏற்படாமல் காத்துக் கொள்ள மூச்சுப் பயிற்சி மிகச் சிறந்த ஒன்று. நம்மில் பலருக்கும் இதன் பலன் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை. நாம் காற்றை உள்ளே இழுக்கும்போது, 78 சதவீதம் நைட்ரஜன், 21 சதவீதம் ஆக்ஸிஜன், 1 சதவீதம் பிற வாயு நுரையீரலைச் சென்றடைகிறது. மூச்சை வெளியிடும்போது 78 சதவீதம் நைட்ரஜன், 17 சதவீதம் ஆக்ஸிஜன், 1 சதவீதம் பிற வாயு, 4 சதவீதம் கார்பன்டை ஆக்ஸைடு நுரையீரலில் இருந்து வெளியேறுகிறது.

இதில் 4 சதவீத ஆக்ஸிஜன் மட்டுமே நுகரப்பட்டு 4 சதவீதம் கார்பன்டை ஆக்ஸைடாக வெளியேறும். மூச்சுப் பயிற்சியில் ஈடுபடும்போது, மூச்சு உள்ளே இழுத்தல், அடக்குதல், விடுதல் மூலம் நுரையீரல் முழுக் காற்றின் கொள்ளளவை அடைகிறது. அப்போது ரத்தம் சுத்தமாவது அதிகரிக்கும். மூச்சுப் பயிற்சியைத் தொடர்ந்து செய்தால் நன்மை கிடைக்கும். இது எனது அனுபவப்பூர்வமான உண்மை. வலது நாசி, இடது நாசி என இருபுறமும் மூச்சை உள்ளே இழுத்து வெளியிடும்போது அசுத்தக் காற்றுகள் வெளியேறி நமது நுரையீரல் புத்துணர்ச்சி அடைந்து சீராக இயங்கும். அதிகாலை நேரத்தில் வெறும் வயிற்றிலும், மாலையில் (மதிய உணவு எடுத்த 5 மணி நேரத்துக்குப் பின்) அனைத்து வயதினரும் மூச்சுப் பயிற்சியை மேற்கொள்ளலாம். இதனால், நுரையீரலில் சளி, நீர் தேங்கி மூச்சுத்திணறல் ஏற்படுவது தடுக்கப்படும். நுரையீரல் இயக்கத்தைச் சீராக்கி தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x