Published : 20 Sep 2020 02:23 PM
Last Updated : 20 Sep 2020 02:23 PM

கொடைக்கானலில் புத்துயிர் பெறும் மலை கிராம சுற்றுலா: கிராம மக்களின் வழிகாட்டுதலில் இயற்கை எழிலை ரசிக்கலாம்

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் மலை கிராமச் சுற்றுலாவை மேம்படுத்த சுற்றுலாத்துறை களம் இறங்கி உள்ளது.

கொடைக்கானலில் மரங்களுக்கு இடையே தொங்கு பாலம் அமைத்து ட்ரீ வாக் செய்வது, நகராட்சி அலுவலகம் அருகே இருந்து ஜிம்கானா மைதானம் வரை ரோப் கார், மலைப் பகுதியில் பள்ளத்தாக்கை ஒட்டிய பகுதியில் கண்ணாடிப் பாலம் அமைத்து ஸ்கை வாக் உருவாக்குவது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு அரசு நிதி ஒதுக்காததால் முடங்கிக் கிடக்கின்றன.

இந்நிலையில், அரசுக்கு செலவே இல்லாத மலை கிராமச் சுற்றுலாவை மேம்படுத்த கொடைக்கானல் சுற்றுலாத் துறை களமிறங்கி உள்ளது.

கொடைக்கானலில் பிரையண்ட் பூங்கா, கோக்கர்ஸ் வாக், படகு சவாரி, மோயர் பாயிண்ட், குணா குகை, தூண் பாறை, பைன் பாரஸ்ட் உள்ளிட்ட வழக்கமான சுற்றுலா இடங்களைத் தவிர கண்களுக்கு குளிர்ச்சியான ரம்மியமான இடங்கள் மலைக் கிராமப் பகுதிகளில் ஏராளமாக உள்ளன.

தற்போது ஏரியில் படகு சவாரிக்கு அனுமதி இல்லை. 12 மைல் சுற்றுச் சாலையில் உள்ள குணா குகை, தூண் பாறை உள்ளிட்ட இடங்களுக்கும் அனுமதி இல்லை. இந்த நிலையில் மலைக் கிராமங்களுக்கு சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் சென்றுவர சுற்றுலாத்துறை முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதன்மூலம் ஒரே இடத்தில் சுற்றுலாப் பயணிகள் அதிகமாக திரளாமல் சமூக இடை வெளியைக் கடைப்பிடிக்க ஏதுவாக இருக்கும்.

கூன்பாண்டிய மன்னர் கட்டிய கோயில்

ஆங்கிலேயர் தான் கொடைக்கானலைக் கண்டுபிடித்தனர் என்பதற்கு மாறாக அதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே மதுரையை ஆண்ட கூன் பாண்டியன் காலத்தில் கட்டப்பட்ட வெற்றி வேலப்பர் கோயில் வில்பட்டி மலைக் கிராமத்தில் உள்ளது.

வில்பட்டி அருகேயுள்ள புலியூர் பகுதியில் புல்வெளி பகுதி அதிகம் உள்ளது. மழைக் காலத்தில் மழைநீரைச் சேமித்து சிறுக சிறுக இங்குள்ள புற்கள் வெளிவிடுவதால் ஓடையாக, அருவியாக, ஆறாக மாறி ஆண்டு முழுவதும் மலைப் பகுதியில் தண்ணீர் வருகிறது.

கொடைக்கானலில் இருந்து பாம்பார்புரம் வழியாக வட்டக்கானல் செல்லும் வழியில் உள் ளது வட்டக்கானல் நீர்வீழ்ச்சி. இந்த இடமும் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகிறது. இங்கு செல்ல பலருக்கும் வழி தெரியாததால், இதை சுற்றுலாப் பயணிகள் அறிந்திருக்கவில்லை.

பள்ளங்கி மலைக் கிராமத்தில் ‘ரிவர் வாக்’

கொடைக்கானலில் இருந்து 10 கி.மீ. தூரத்தில் உள்ளது பள்ளங்கி மலைக் கிராமம். இயற்கை எழில் சூழ்ந்த இந்த ஊரில் சிறிய சமவெளி பகுதியில் ஓடும் சிற்றோடையில் எப்போதும் குளிர்ந்த நீர் ஓடிக் கொண்டிருக்கும். குளிர்ந்த நீரில் கால்களை நனைத்தபடி நடந்து சென்றவாறு இயற்கை எழிலை ரசிக்கலாம். இதற்கு ரிவர் வாக் என்று பெயர்.

பள்ளங்கி - கோம்பை இடையே பள்ளங்கி அருவி உள்ளது. அதன் அருகேயுள்ள புல்வெளி பகுதியில் பல திரைப்படங்களின் படப்பிடிப்புகள் நடந்துள்ளன. இப்பகுதியில் 360 டிகிரியில் மலையைப் பார்க்கலாம். கோம்பை பகுதிக்குச் சென்று அங்கு வசிக்கும் பழங்குடியின மக்களின் பழக்க வழக்கத்தை அறிந்து வரலாம். மேலும் காப்பி, மிளகு, கேரட் விளைப்பது குறித்தும் தோட்டங்களுக்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.

தனியார் தோட்டமாக இருந்தாலும் சுற் றுலாப் பயணிகள் வந்தால் அவர்களை பார் வையிட அனுமதிக்க சுற்றுலாத்துறை சார்பில் தோட்டக்காரர்களிடம் வேண்டுகோள் விடுக்கப் பட்டுள்ளது. இதற்கு தோட்ட உரிமையாளர்களும் ஒத்துழைக்கின்றனர்.

ஆதிமனிதன் கற்திட்டை

கொடைக்கானல் செல்லும் வழியிலேயே பெருமாள்மலை அருகேயுள்ளது பேத்துப்பாறை மலை கிராமம். இங்கு ஆதிமனிதனின் கற்தி ட்டை உள்ளது. தொல்லியல் துறையால் பராமரிக்கப்படும் இந்த இடம் அவசியம் பார்க்க வேண்டிய ஒன்று. பேத்துப்பாறையை அடுத்து அஞ்சுவீடு அருவி, ஓராவி அருவி உள்ளன. இங்கு ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டும் இயற்கை எழிலை கண்டு ரசிக்கலாம்.

பள்ளத்தாக்கில் மலைக் கிராமம்

பழநியில் நவபாசாண முருகன் சிலை இருக்கும் நிலையில், பூம்பாறையில் தச பாசாணத்தால் ஆன முருகர் சிலை உள்ளது சிறப்பு. கூக்கால் கிராம ஏரியில் அரிய வகை நீர்நாய்கள் உள்ளன. இங்கு புவிசார் குறியீடு பெற்ற பூண்டு, கேரட் அதிகம் பயிரிடப்படுகிறது.

போளூர் கிராமம் அருகே புலவிச்சாறு அருவியை கண்டு ரசிக்கலாம். மலைக் கிரா மங்களில் தங்க தனியார் விடுதிகள் உள் ளன. இக்கிராமங்களில் கண்டு ரசிக்காத இயற்கை எழிலைக் காண விரும்புவோருக்கு கொடைக்கானல் சுற்றுலாத்துறை வழிகாட்டுகிறது.

இதுகுறித்து சுற்றுலாத்துறையினர் கூறிய தாவது: கொடைக்கானல் மலை கிராம ங்களில் இயற்கை எழில் கொட்டிக் கிடக்கிறது. இவற்றை கண்டுபிடித்து சுற்றுலா வரைபடத்தில் சேர்க்க முயற்சி மேற்கொண்டு வருகிறோம். பேத்துப்பாறையில் ஆதிமனிதன் கற்திட்டை உள்ள இடத்தை சுற்றுலா வரைபடத்தில் சேர்த்துள்ளோம். மலை கிராமங்களில் காண வேண்டிய இடங்கள் குறித்து சுற்றுலாத் துறையை அணுகுபவர்களுக்கு உதவுகிறோம்.

மலை கிராமச் சுற்றுலாவை வளர்ப்பதன் மூலம் மலைவாழ் மக்களின் பொருளாதாரம் உயரும். சுற்றுலாப் பயணிகளுக்கும் புதிய இடங்களை கண்டு ரசித்த மகிழ்ச்சி ஏற்படும் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x