Last Updated : 20 Sep, 2020 01:45 PM

 

Published : 20 Sep 2020 01:45 PM
Last Updated : 20 Sep 2020 01:45 PM

110 வயது மூதாட்டியின் நீண்ட ஆயுளுக்கு காரணம் என்ன? - சுந்தரனார் பல்கலை. மாணவர்கள் ஆராய்ச்சி

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் உயிர்தொழில் நுட்பத்துறையில் பயிலும் மாணவ, மாணவியரின் ஆராய்ச்சிகள் வியக்க வைக் கின்றன. இந்த ஆராய்ச்சிகளின் முடிவுகள் வெளியாகும்போது உலக கவனத்தை ஈர்க்கும் என்று பேராசிரியர்கள் தெரிவித்தனர்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி படிக்கின்றனர். ஆராய்ச்சித்துறையில் அக்கறை செலுத்தும் இவர்களுக்கு, பல்கலைக்கழக பேராசிரியர்கள் வழிகாட்டுகின்றனர்.

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ரவி என்ற மாணவர், உயிர் தொழில்நுட்பவியல் துறையில் எம்.எஸ்.சி. பயின்று வருகிறார். இவர் 110 வயதான மூதாட்டி ஒருவரின் மரபணுவின் மகத்துவத்தை கண்டறியும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார். 110 வயது வரை வாழ்வது ஓர் அதிசயம். யார் துணையுமின்றி வாழ்வது மகாஅதிசயம். எனவே, அந்த மூதாட்டியின் நீண்ட ஆயுளுக்கு என்ன காரணம் என்ற கேள்விக்கு விடைதேடும் வகையில் இம்மாணவரின் ஆய்வு அமைந்துள்ளது. இந்த ஆய்வு இன்னும் சில மாதங்களில் நிறைவடைந்து கட்டுரை வெளியாகவுள்ளது.

சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்த மாணவர் பழனி. உயிர் தொழில்நுட்பவியல் துறையில் எம்.பில். பயின்று வருகிறார். இவர் ஒருவகை நண்டின் 14 ஆயிரம் மரபணுக்களை கண்டறிந்துள்ளார். இவரது கண்டுபிடிப்பும் சிறந்த ஆய்வு கட்டுரையாக வரவுள்ளது.

ஈரோடு பகுதியைச் சேர்ந்த மாணவர் சவுந்தரியன். உயிர் தொழில்நுட்பவியல் துறையில் எம்.எஸ்.சி. படித்து வருகிறார். நம் உடலில் உள்ள காயங்களை மறுவளர்ச்சி (Regeneration) முறையில் குணப்படுத்த ஆய்வு செய்துள்ளார். இந்த ஆய்வுக்கு மண்புழு ஆய்வில் கிடைத்த தகவல்கள் பெரிதும் பயன்பட்டுள்ளன.

தேனி பகுதியைச் சேர்ந்த மாணவர் சஞ்சீவிராஜன், எம்.எஸ்.சி. பயில்கிறார். மண்புழுவின் கால்கள், அதன் அமைப்பு, அதன் உட்பொருள், அதைச் சார்ந்த மரபணுக்கள் என வியக்கத்தக்க பல விஷயங்களை வெளிக்கொண்டு வந்துள்ளார்.

ஆராய்ச்சியில் ஆர்வம்

இவர்களுக்கு ஆராய்ச்சி வழிகாட்டியாக செயல்படும் பேராசிரியர் சி.சுதாகர் கூறும்போது, “ மாணவர்களின் ஆராய்ச்சி முடிவுகள் கட்டுரைகளாக வெளிவந்த பின்னர் தான் , அந்த ஆராய்ச்சி குறித்த விரிவான தகவல்கள் தெரியப்படுத்தப்படும். இன்னும் 3 மாதங்களில் இந்த ஆராய்ச்சி முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கிறோம்.

வளர்ந்த நாடுகளில் உள்ள பல்கலைக் கழகங்களில் இதுபோன்று அரிய ஆராய்ச்சிகளை மாணவர்கள் மேற்கொள்கிறார்கள். நமது பல்கலைக்கழக மாணவர்களும் ஆர்வத்துடன் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது மகிழ்ச்சிக்குரியது. என்றார் அவர். . ஆராய்ச்சி முடிவுகள் கட்டுரைகளாக வெளிவந்த பின்னர் விரிவான தகவல்கள் தெரியப்படுத்தப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x