

கோவையிலிருந்து கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங் கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு தினமும் சுமார் 500 ஆம்னி பேருந்துகள் இயக்கப் பட்டு வந்தன. சராசரியாக நாளொன்றுக்கு 11 ஆயிரம் பேர் பயணித்தனர். வார இறுதி நாட்கள், பண்டிகைக் காலங்களில் இந்த எண்ணிக்கை 16 ஆயிரம் வரை உயரும்.
தனி நபர் இடைவெளியைக் கடைப் பிடித்து செப்டம்பர் 7-ம் தேதி முதல் ஆம்னி பேருந்துகளை இயக்கலாம் என அரசு அறிவித்திருந்தாலும், இதுவரை ஆம்னி பேருந்துகள் இயங்கவில்லை. ஊரடங் கால் பேருந்துகளை இயக்காமல் நிறுத்தி வைத்திருந்ததால், இரு காலாண்டுகளுக் கான சாலை வரியை ரத்து செய்ய வேண்டும்.
பேருந்துகளுக்கான காப்பீட்டை 6 மாதங்களுக்கு நீட்டித்துத் தருவதுடன், கடன்களுக்கான வட்டியை 6 மாதங் களுக்கு தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து, பேருந்துகளை இயக்காமல் காத்திருக் கின்றனர் அவற்றின் உரிமையாளர்கள். இதுகுறித்து கோவை ஆம்னி பேருந்து உரிமையாளர்கள், முகவர்கள் சங்கச் செயலாளர் என்.செந்தில்குமார் கூறியதாவது:
கல்லூரி மாணவர்கள், தகவல் தொழில் நுட்ப நிறுவனப் பணியாளர்களை சார்ந்து தான் ஆம்னி பேருந்துகள் இயங்குகின்றன. இவ்விரு தரப்பினரும் தற்போது பயணிக்க வாய்ப்பில்லை. மேலும், பண்டிகைகள், திருமண விழாக்களுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவதால், இதற்காக பயணம் செய்வோரும் குறைந்துவிட்டனர்.
பெரும்பாலும் வியாபாரம், தொழில் சார்ந்தவர்களே தற்போது பயணம் செய்வ தால், ஆம்னி பேருந்துகளை இயக்கி னாலும், குறைவான இருக்கைகளே நிரம்பும். மேலும், டீசல் விலையும் லிட்டருக்கு ரூ.10 வரை அதிகரித்துள்ளது. பேருந்துகளை இயக்காததால் ஆம்னி ஓட்டுநர்களில் பலர், வாழ்வாதாரத்துக்காக வேறு வேலைகளுக்குச் சென்றுவிட்டனர்.
இதனால், பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டுமெனில் புதிதாக ஓட்டுநர்களை நியமிக்க வேண்டும். நிறுத்திவைக்கப்பட்டுள்ள பேருந்தை வெளியில் எடுத்து இயக்க வேண்டு மெனில், பராமரிப்புக்காக மட்டும் ரூ.1 லட்சம் வரை செலவு செய்ய வேண்டும். இதுபோன்ற சூழலில் பேருந்துகளை இயக்கினால் நஷ்டமே ஏற்படும். பழையபடி அனைத்து துறைகளும் இயங்கினால்மட்டுமே ஆம்னி பேருந்து தொழில் மீண்டுவரும்.
கரோனாவுக்கு முன்பே குறைந்த சதவீத லாபத்தில்தான் ஆம்னி பேருந்துகள் இயங்கின. பல பிரபல பேருந்து நிறுவனங் கள், தொழிலை நடத்த முடியாமல் வெளி யேறிவிட்டன. வழக்கமாக, வார நாட்களில் பேருந்துகளின் இருக்கைகளில் 50 சதவீதம் மட்டுமே நிரம்பும். எனவே, அதை ஈடுகட்டவே சனி, ஞாயிற்றுக்கிழமை களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பு செயலர் என்.லோகு கூறும்போது, "ஆம்னி பேருந்துகளுக்கான கட்டணத்தை அரசு முறைப்படுத்தவில்லை. இதனால், வார இறுதி நாட்கள், பண்டிகை, விடுமுறைக் காலங்களில் அதிக கட்டணம் வசூலிக்கின்றனர். ஆம்னி பேருந்துகளை மீண்டும் இயக்க அதிக செலவாகும் என்று கூறுவது கண்துடைப்புதான். தமிழகத்தில் இயக்கப் படும் பெரும்பாலான ஆம்னி பேருந்துகள், வெளிமாநில பதிவு எண்ணைக் கொண்டே இயங்கி வருகின்றன.
மோட்டார் வாகன விதிகளை மீறி பேருந்துகளின் அடிப்பாகத் திலும், மேல் பகுதியிலும் அதிக பார்சல் களை ஏற்றி, வருமானம் ஈட்டுகின்றனர். கோவையிலிருந்து காரைக்குடி, சிதம்பரம் உள்ளிட்ட ஊர்களுக்குச் செல்லும் ஆம்னி பேருந்துகளில், இடையில் உள்ள ஊர் களுக்கு பயணம் செய்வோரிடம் முழு கட்டணமே வசூலிக்கப்படுகிறது. எனவே, ஆம்னி பேருந்து கட்டணத்தை முறைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்"என்றார்.