Published : 20 Sep 2020 12:01 PM
Last Updated : 20 Sep 2020 12:01 PM

ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறை: தொழில்நுட்ப பிரச்சினையால் மலை மாவட்ட மக்கள் தவிப்பு

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருட்களை வாங்க பயோமெட்ரிக் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதற்கான கருவிகளில் கோளாறு ஏற்படுவதாலும், தொலைத்தொடர்பு சிக்னல் கிடைக்காததாலும் பொருட்கள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டு, பொதுமக்கள் பொருட்களைப் பெற முடியாமல் தவிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.

பயோமெட்ரிக் திட்டத்தின்படி, ரேஷன் கார்டுகளில் பெயர் இடம் பெற்றுள்ள குடும்ப உறுப்பினர் மட்டுமே, ரேஷன் கடைக்குச் சென்று அத்தியாவசியப் பொருட்களை வாங்க முடியும். இதற்காக வழங்கப்பட்டுள்ள மின்னணு கருவியில் கைரேகையைப் பதிவு செய்வது அவசியமாகும். இந்த நடைமுறைக்கு இணையதள வசதி இருப்பதுடன், தொலைத்தொடர்பு சிக்னல் சரியாக கிடைக்க வேண்டும். ஆனால், மலைப் பகுதியான நீலகிரிமாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொலைத்தொடர்பு சிக்னல் கிடைப்பதில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன.உதகை, குன்னூர், கோத்தகிரி போன்ற நகரப் பகுதிகளிலேயே சிக்னல் கிடைப்பதில் சிக்கல் உள்ள, வனப் பகுதிகளையொட்டிய குந்தா, கூடலூர், பந்தலூர் வட்டங்களில் பெரும்பாலான இடங்களில் தொலைத்தொடர்பு சிக்னல் கிடைப்பதில்லை.

இதனால், இப்பகுதிகளில் உள்ளபெரும்பாலான ரேஷன் கடைகளில் பயொமெட்ரிக் முறையில் பொருட்களை வாங்க முடியாமல் தவிக்கின்றனர். கடந்த 2, 3 நாட்களாக தினமும்கடைக்கு வந்துவிட்டு, பொருட்களைப் பெற முடியாமல் ஏராளமானோர் திரும்பிசெலகின்றனர்.

ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் போதுமான அளவுக்கு இருப்பு இருந்தாலும், அவற்றை நுகர்வோருக்கு வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து ரேஷன் நுகர்வோர் கூறும்போது, "இந்தப் பிரச்சினை தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் புகார் அளித்தும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதுபோன்ற புதிய திட்டங்களை அறிமுகம் செய்யும்போது, தேவையான வசதிகளையும் செய்த பின்னர் திட்டத்தை செயல்படுத்தினால், மக்கள் பயனடைவார்கள்" என்றனர்.

ரேஷன் கடை ஊழியர்கள் கூறும்போது, "பயோமெட்ரிக் இயந்திரத்தில் வயதானவர்களின் கைரேகை பதிவாவதில்லை. கிராமப்புற மக்கள் ஆதார் அட்டை, செல்போனைக் கொண்டு வராததால், செல்போனுக்கு வரும் ஓடிபி-யை தெரிந்துகொள்ள முடியவில்லை. ஒரு அட்டைதாரருக்கே 30 நிமிடங்களிலிருந்து ஒரு மணி நேரம் வரை ஆகிறது. இதனால், பணிச் சுமை அதிகரிக்கிறது" என்கின்றனர். அதேபோல, பயோமெட்ரிக் இயந்திரத்தில் பலரும் கைரேகை பதிவு செய்வதால், கரோனா வைரஸ் தொற்று பரவ வாய்ப்புள்ளதாக புகார்கள்எழுந்துள்ளன.

இதுகுறித்து கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலர் சு.சிவசுப்ரமணியம் கூறும்போது, "கரோனா தொற்று அதிகரித்துவரும் சூழலில், பயோமெட்ரிக் கருவி நடைமுறையை ஒத்திவைத்திருக்க வேண்டும். இந்த விவகாரம்தொடர்பாக திருச்சி மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு தலைவர் சேகரன், தேசிய மனித உரிமைகள் ஆணையத்துக்கு புகார் அனுப்பியுள்ளார். இதற்கு உரிய விளக்கம் அளிக்கும்படி தேசிய மனித உரிமைகள் ஆணையமும் உத்தரவிட்டுள்ளது. இதை அடிப்படையாக கொண்டு, புதியநடைமுறையை தவிர்க்க வேண்டும்" என்றார்.

கூட்டுறவுத் துறை அதிகாரிகள் கூறும்போது, "அனைத்து ரேஷன்கடைகளிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஒருவர் கைரேகை பதித்தவுடன், அக்கருவியை கடை ஊழியர் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் மலைப் பகுதி என்பதால், தொலைத்தொடர்பு சிக்னல் கிடைப்பதில் சிரமம் உள்ளது. இதுகுறித்து தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் பேசி, பிரச்சினைக்குத் தீர்வுகண்டு வருகிறோம்" என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x