

தொடர் நோய் தாக்குதலால் பாதிப்புக்குள்ளான விவசாயிகள், பாரம்பரிய நெட்டை ரக தென்னங்கன்றுகளையே தேர்வு செய்து வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் 15,000 ஹெக்டேர் பரப்பளவில் சுமார் 25,00,000 தென்னை மரங்கள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளாக வெள்ளை ஈ தாக்குதலால் தென்னை விவசாயிகள் பலரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
இவற்றை கட்டுப்படுத்த களைக்கொல்லிகளையும், இயற்கை முறையிலானவேப்பங்கொட்டை, புண்ணாக்கு,வேப்ப எண்ணெய், இரவில் விளக்குப்பொறி உள்ளிட்ட ஒருங்கிணைந்த பண்ணை முறையையும் விவசாயிகள் கடைப்பிடித்தனர். வெள்ளை ஈக்களை உணவாகக்கொள்ளும் ஒட்டுண்ணிகள் மூலம் அவற்றை அழிக்க முயற்சித்தபோதும், அவற்றை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்நிலையில் பாரம்பரிய ரக தென்னை வளர்ப்புக்கு விவசாயிகள் மாறிவருகின்றனர்.
இதுகுறித்து தென்னை விவசாயிகள் சங்கத் தலைவர் செல்வராஜ் கூறும்போது, ‘‘முன்பு பாரம்பரிய நெட்டை ரக தென்னை அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டது. காய்ப்புக்காக சில ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். மரபணு மாற்றப்பட்ட குட்டை ரகங்கள் வருகையால், அதிக உற்பத்திக்கு ஆசைப்பட்டு பலரும் குட்டை ரகங்களை தேர்வு செய்தனர். அதன் விளைவு பல வகையான நோய் தாக்குதல் ஏற்பட்டது. அதனை தாக்குப் பிடிக்க முடியாமல் தென்னை மரங்கள் பேரழிவை சந்தித்தன. தற்போது மீண்டும் பாரம்பரிய தென்னை ரகங்களை விவசாயிகள் தேர்வு செய்வது வரவேற்புக்குறியது’’ என்றார்.
தென்னை வளர்ச்சி வாரிய அதிகாரிகள் கூறும்போது, ‘‘திருமூர்த்திமலையில் உள்ள தென்னை வளர்ச்சி வாரியம் மூலம் ஆண்டுக்கு சுமார் 1,00,000 நாற்றுகள் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படுகின்றன. கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், சேலம், நாமக்கல், திண்டுக்கல், தேனி, பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, அதிக அளவிலான விவசாயிகள் இந்த பண்ணை மூலம் பயன்பெற்று வருகின்றனர். குட்டை ரகங்களுக்கு மாற்றாக, பொள்ளாச்சி நெட்டை ரகம் அதிக அளவில் விவசாயிகளால் தேர்ந்தெடுக்கப்படுகிறது’’என்றனர்.