

சென்னை கிண்டியில் உள்ள அரசு கரோனா மருத்துவமனையில் நோயாளிகளின் நுரையீரல் செயல் திறனை அதிகரிக்க பலூன்களை ஊதும் பயிற்சியும் மனஅழுத்தத்தைப் போக்க மியூசிக்கல் தெரபியும் அளிக்கப்படுகிறது.
சென்னை கிண்டியில் உள்ளகிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் அமைக்கப்பட்ட தேசிய முதியோர்நல மருத்துவ மையம், அனைத்துநவீன வசதிகளுடன் கூடியகரோனா மருத்துவமனையாகமாற்றப்பட்டுள்ளது. மொத்தம்750 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கு ஆங்கில மருத்துவத்துடன் தினமும்யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. இவற்றுடன் நுரையீரல் செயல் திறனை அதிகரிக்க பலூன்களை ஊதும் தெரபி, மனஅழுத்தத்தை போக்க மியூசிக்கல் தெரபி என பல்வேறு சிகிச்சை முறைகள்நோயாளிகளுக்கு கொடுக்கப்படுகிறது.
இதுதொடர்பாக சென்னை அரசு பொது மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளரும் கரோனா மருத்துவமனை ஒருங்கிணைப்பாளருமான மருத்துவர் நாராயணசாமி கூறியதாவது:
இந்த கரோனா மருத்துவமனையில் இதுவரை 3,135 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2,537 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இங்கு நோயாளிகளுக்கு சிகிச்சையுடன் யோகா பயிற்சியும் அளிக்கப்படுகிறது. நோயாளிகள் யோகா பயிற்சி செய்ய தனியாக அரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நுரையீரல்பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால்,நுரையீரல் செயல் திறனை அதிகரிக்க பலூன்களை ஊதும் தெரபி அளிக்கப்படுகிறது. பலூன்களை ஊதும்போதும், காற்றை உள்ளே இழுக்கும் போதும் நுரையீரல் சுருங்கிவிரிகிறது. அதேபோல், பாத்திரத்தில் தண்ணீரை வைத்து ஸ்ட்ராமூலம் ஊத சொல்கிறோம். இதனால், நுரையீரல் செயல்பாடு அதிகரிக்கும்.
மனஅழுத்தத்தை போக்க இசை கருவி இசைக்கப்படுகிறது. நோயாளிகள் புத்தகங்களை வாசிக்க மருத்துவமனையில் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சிகிச்சை பெற்று சென்றபலர் புத்தகங்களை வழங்கியுள்ளனர். இங்கு சிகிச்சை பெறுபவர்களுக்கு மருத்துவமனையில்இருப்பது போன்று தெரியாது. தங்களுடைய வீடுகளில் இருப்பதை போலவே உணர்கின்றனர்.
இவ்வாறு மருத்துவர் நாராயணசாமி தெரிவித்தார்.