

சென்னை பாடியில் நடந்த பிரதமர் மோடியின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் பலூன்கள் வெடித்து ஏற்பட்ட விபத்து தொடர்பாக பாஜக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை பாடி சிவன் கோயில் அருகே பாஜக விவசாய அணி சார்பில், பிரதமர் மோடியின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட பலூன்களை காற்றில் பறக்கவிட திட்டமிடப்பட்டிருந்தது. அப்போது 500-க்கும் அதிகமான காஸ் பலூன்கள் ஒரே நேரத்தில் வெடித்து சிதறின. குண்டு வெடித்ததுபோல பெரும் தீப்பிழம்பு ஏற்பட்டது. அங்கே கூடியிருந்தவர்கள் மீது தீப்பொறி விழுந்ததில் 20-க்கும் மேற்பட்டவர்கள் தீக்காயம் அடைந்தனர்.
பலூன்களை பறக்கவிடுவதற்காக வழக்கமாக காற்றைவிட எடைக்குறைவான ஹீலியம் வாயுவை பயன்படுத்துவது வழக்கம். ஆனால், ஹீலியம் வாயு விலை அதிகம் என்பதால், ஹைட்ரஜன் வாயுவை பலூன்களில் நிரப்பியதாகக் கூறப்படுகிறது. இதனால்தான் பலூன்கள் அதிக வெப்பத்தில் வெடித்து சிதறியபோது, பெரிய தீப்பிழம்பு உருவானதாக கூறப்படுகிறது. எனவே, பலூன்களில் நிரப்பிய வாயு ஹீலியமா அல்லது ஹைட்ரஜனா என்பது குறித்தும் கொரட்டூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், நிகழ்ச்சிக்காக எந்த அனுமதியும் பெறாததும் 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் அனுமதி பெறாமல் ஆட்களை கூட்டியதாகவும் தீப்பற்றக்கூடிய பொருட்களை அஜாக்கிரதையாக கையாண்டதாகவும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் பிரபாகரன் மற்றும் சிறப்பு விருந்தினர் முத்துராமன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.