Published : 20 Sep 2020 07:21 AM
Last Updated : 20 Sep 2020 07:21 AM

சென்னை உட்பட 14 மாவட்டங்களில் ரூ.353 கோடியில் 25 துணை மின்நிலையங்கள்: முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்

சென்னை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் ரூ.353 கோடியே 11 லட்சத்து 84 ஆயிரம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 25 துணை மின்நிலையங்களை முதல்வர் பழனிசாமி நேற்று திறந்துவைத்தார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஈரோடு மாவட்டம் - ந.மேட்டுப்பாளையம், கணபதிபாளையம், கள்ளக்குறிச்சி - சங்கராபுரம், ஆசனூர் சிட்கோ, மூங்கில்பாடி, வேலூர் - ஒடுகத்தூர், சேலம் - மின்னாம்பள்ளி, கோவை - செங்கத்துறை, மகாத்மா காந்தி சாலை, திருச்சி - பூவாளூர், கல்லக்குடி, திருவள்ளூர் - திருநின்றவூர், கடலூர் - வளையமாதேவி, திருவாரூர் - கோவில்வெண்ணி ஆகிய இடங்களில் 110/11, 230/110, 110/33, 110/22 கி.வோ என பல்வேறு திறன்கள் கொண்ட துணை மின்நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அதேபோல் சென்னை - நேர்மை நகர், கோவை - கிட்டாம்பாளையம் அண்ணா தொழிற்பூங்கா, கிருஷ்ணகிரி - திம்ஜேப்பள்ளி, நாகை - குத்தாலம் மற்றும் திட்டச்சேரி, தஞ்சை - திருவலத்தேவன் மற்றும் கள்ளப்பெரம்பூர், திருவண்ணாமலை - மேல்செங்கம், வெள்ளேரி, மேக்களூர், தச்சாம்பாடி ஆகிய பகுதிகளில் 33/11 கி.வோ திறன் கொண்ட துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மொத்தம் ரூ.353 கோடியே 11 லட்சத்து 84 ஆயிரம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 25 துணை மின் நிலையங்களை முதல்வர் பழனிசாமி நேற்று திறந்துவைத்தார்.

நவீன தொழில்நுட்பம்

கடந்த ஆண்டு முதல்வர் பழனிசாமி லண்டன் சென்றபோது அங்கு இயக்கத்தில் உள்ள ‘ஸ்மார்ட் கிரிட்’ தொழில்நுட்பத்தை பார்வையிட்டார். அதன் அடிப்படையில் தமிழகத்திலும் அத்திட்டத்தை செயல்படுத்தும் நோக்கில், செயற்கை நுண்ணறிவு சார்ந்த புதிய தொழில்நுட்பம் மூலம் செயல்பட்டு, மின் கட்டமைப்பு அலகுகளுக்கு ஏற்ப காற்றாலை மின்சார உற்பத்தி அளவை நெறிப்படுத்தும் சோதனை ரீதியிலான திட்டத்தை, நாட்டிலேயே முதல்முறையாக தமிழகத்தில் செயல்படுத்துவதற்கான திட்ட ஒப்பந்த ஆணையை பெங்களூருவில் உள்ள ‘என்சென் குளோபல் சொலுஷன்ஸ்’ நிறுவனத்துக்கு முதல்வர் பழனிசாமி வழங்கினார். இத்திட்டத்துக்காக அரசு ரூ.6 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி, தலைமைச் செயலர் கே.சண்முகம், எரிசக்தித் துறை செயலர் எஸ்.கே.பிரபாகர், மின்வாரிய தலைவர் பங்கஜ்குமார் பன்சல், தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழக மேலாண் இயக்குநர் எஸ்.சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x