பெண் எஸ்ஐ தேர்வில் புதிய அரசாணையால் பலர் தகுதியிழப்பு: பழைய நடைமுறையை பின்பற்ற முதல்வருக்கு கோரிக்கை

பெண் எஸ்ஐ தேர்வில் புதிய அரசாணையால் பலர் தகுதியிழப்பு: பழைய நடைமுறையை பின்பற்ற முதல்வருக்கு கோரிக்கை

Published on

தமிழகத்தில் காவல்துறை எஸ்.ஐ. பணியிடங்களுக்கான தேர்வின் போது, பெண்களுக்குரிய உடல் தகுதி குறித்த பழைய அரசாணையை அரசு பின்பற்ற வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழக காவல்துறையில் தாலுகா அளவிலும், இதர பிரிவுகளிலும் உள்ள எஸ்.ஐ. பணியிடங்கள், சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் நிரப்பப்பட்டு வருகின்றன. இந்தாண்டும் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், தற்போது உடல் திறன் போட்டியில் பின்பற்றப்படும் நடைமுறையால் பெண்கள் பலர் பாதிக்கப்பட்டு தகுதியிழந்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஜனவரியில் வெளியான அரசாணைதான் இதற்கு காரணம் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து தேர்வில் பங்கேற்ற பெண் ஒருவர் 'தி இந்து'விடம் கூறியதாவது: உடல் திறன் நிலையில் நீளம் தாண்டுதல், கிரிக்கெட் பந்து அல்லது குண்டு எறிதல், 100 மீட்டர் ஓட்டம் அல்லது 200 மீட்டர் ஓட்டம் என போட்டிகள் நடத்தப்படுகின்றன.

இந்த போட்டிகள் தொடர்பாக 2003-ல் வெளியிடப்பட்ட அரசாணையில், ‘காவல் துறையில் பெண்கள் உடல்திறன் போட்டியில் மதிப்பெண்கள் பெறவில்லை என்றாலும் 3 போட்டிகளிலும் கலந்துகொள்ள வேண்டும். இப்போட்டிகளில் பெறும் மதிப்பெண்கள் மொத்த தகுதி மதிப்பெண்களில் கணக்கில் கொள்ளப்படும்’ என கூறப்பட்டிருந்தது.

இதன் அடிப்படையில் அப்போது தேர்வு நடத்தப்பட்டது. தொடர்ந்து, திமுக ஆட்சியில், 2006 மற்றும் 2010-ம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட எஸ்.ஐ. தேர்வுகளின்போதும் இதே முறை பின்பற்றப்பட்டு தேர்வு நடந்தது.

2011-ம் ஆண்டு முதல்வராக ஜெயலலிதா மீண்டும் பொறுப்பேற்றார். அதையடுத்து கடந்தாண்டு இறுதியில் ஓ.பன்னீர்செல்வம் முதல்வரானார். அப்போது, கடந்தாண்டு டிசம்பர் மாதம் புதிய அரசாணை (எண் 998) வெளியானது. அந்த அரசாணை, இந்தாண்டு ஜனவரி மாதம் அரசிதழில் வெளியிடப்பட்டது.

அதில் ‘பெண்கள் உடல் திறன் போட்டியான நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், 100 மீட்டர் ஓட்டம் ஆகிய 3 போட்டிகளிலும் கட்டாயம் வெற்றி பெற வேண்டும். இல்லையெனில் போட்டிகளில் இருந்து தகுதியிழப்பர்’ என்று கூறப்பட் டுள்ளது.

இந்த அரசாணை அடிப்படையி லேயே தற்போது எஸ்.ஐ. தேர்வு நடக்கிறது. ஆனால், ஆண்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் பங்கு பெறும் வகையில் உருவாக்கப்பட்ட போட்டிகளின் நேரம் மற்றும் தூர அளவுகளை சாதாரண பெண்கள் பங்கு பெறும் வகையில் மாற்றி அமைக்கவில்லை.

இதனால், உடல் திறன் தேர்வில் பங்கேற்ற பலரும் தோல்வி யடைந்துள்ளனர். தற்போது பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட காலிப்பணியிடங்களை முழுமையாக நிரப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பெண்கள் பாதிக்கப்படாத வண்ணம் முந்தைய அரசாணைப்படி, உடல் திறன் தேர்வில் பங்கேற்றவர்களை நேர்முகத்தேர்வுக்கு அழைக்க உத்தரவிட வேண்டும் என்று அவர் கூறினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in