

சென்னை காவல்துறையின் 12 துணை ஆணையர்களின் கீழ் சைபர் பிரிவு போலீஸார் இயங்கும் வகையில் அமைக்கப்பட்டதால் இதுவரை ரூ.22.81 லட்சம் பணம் மீட்கப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை காவல்துறை ஆணையரகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
“சென்னை பெருநகர காவல்துறையில் சைபர் குற்றங்கள் சார்ந்த நடவடிக்கைகளுக்கு இதுநாள் வரை சென்னை ஆணையரகத்தில் 2003-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீஸார் விசாரித்து வந்தனர்.
சென்னை பெருநகரில் பொதுமக்கள் புகார் தெரிவிக்க நீண்ட தூரம் வரவேண்டிய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு தமிழக முதல்வர் உத்தரவின் பேரில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால், கடந்த ஆகஸ்டு அன்று சென்னை பெருநகரில் உள்ள 12 காவல் மாவட்ட துணை ஆணையாளர்களின் நேரடி மேற்பார்வையில் சைபர் கிரைம் பிரிவை உருவாக்கி எளிதில் பொதுமக்கள் தங்கள் வசிப்பிடத்திற்கு அருகாமையில் உள்ள சைபர் கிரைம் பிரிவில் புகார் தெரிவித்து உரிய தீர்வு காண ஏற்பாடு செய்துள்ளார்.
பொதுமக்கள் வசிக்கும் அந்தந்த மாவட்டப் பகுதிகளில் கீழே குறிப்பிடப்பட்ட காவல் நிலையத்தில் இப்பிரிவுகள் இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
1) மயிலாப்பூர் காவல் நிலையம் (மயிலாப்பூர் மாவட்டம்),
2) கீழ்ப்பாக்கம் காவல் நிலையம் (கீழ்ப்பாக்கம் மாவட்டம்),
3) சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையம் (திருவல்லிக்கேணி மாவட்டம்),
4) மாம்பலம் காவல் நிலையம் (தியாகராய நகர் மாவட்டம்)
5) அடையாறு காவல் நிலையம் (அடையாறு மாவட்டம்)
6) புனித தோமையார் மலை காவல் நிலையம் (புனிததோமையார்மலை மாவட்டம்),
7) அண்ணா நகர் காவல் நிலையம் (அண்ணா நகர் மாவட்டம்)
8 ) ஆவடி காவல் நிலையம் (அம்பத்தூர் மாவட்டம்)
9) ஓட்டேரி காவல் நிலையம் (புளியந்தோப்பு மாவட்டம்)
10) வடக்கு கடற்கரை காவல் நிலையம் (பூக்கடை மாவட்டம்)
11) புதிய வண்ணாரப்பேட்டை காவல் நிலையம் (வண்ணாரப்பேட்டை மாவட்டம்)
12) மாதவரம் பால் பண்ணை காவல் நிலையம் (மாதவரம் மாவட்டம்)
சைபர் கிரைம் பிரிவில் நியமிக்கப்பட்டுள்ள தனிப்படையினருக்கு சிறப்புப் பயிற்சி வழங்கி உரிய வழிகாட்டுதல்களோடு பொதுமக்களுக்கு சைபர் குற்றம் சார்ந்த குறைகளைத் தீர்க்க 12 காவல் மாவட்டங்களில் துணை ஆணையர் நேரடி மேற்பார்வையில் செயல்பட்டு வருகிறது.
இணையம் மற்றும் மொபைல் சேவைகள், ஆன்லைன் பரிவர்த்தனை மற்றும் சமூக ஊடகங்களின் பயன்பாட்டின் மூலம் இணையக் குற்றங்கள் நடைபெறுவதில் ஓடிபி மோசடி, இணைய வழி மூலம் பின்தொடர்தல், சமூக ஊடகங்களில் பெண்களைத் துன்புறுத்துவது, ஆபாசப் பதிவுகள், சாதி, மதம் போன்றவற்றின் அடிப்படையில் தவறான மற்றும் பிளவுபடுத்தும் பதிவுகள் தொடர்பான புகார்களின் பெயரில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சென்னை பெருநகரில் புதிதாக அமைக்கப்பட்ட சைபர் கிரைம் பிரிவுகளில் இதுவரை டெபிட் கார்டு, கிரடிட் கார்டு மோசடி, ஆன்லைன் பரிவர்த்தனை மோசடி, ஆன்லைன் லாட்டரி, OTP மோசடி, லோன் மோசடி, வேலை வாய்ப்பு மோசடி, சமூகப் பிரிவினையைத் தூண்டுதல், தனி நபருக்கு எதிரான இணையதளச் செயல்கள், பெண்களைத் துன்புறுத்துவது, ஆபாசப் பதிவுகள் போன்ற சைபர் குற்றங்கள் தொடர்பாக இதுவரை நான்கு மண்டலங்களில் 602 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
வடக்கு மண்டலத்தில் 57 வழக்குகள், தெற்கு மண்டலத்தில் 292 வழக்குகள், கிழக்கு மண்டலத்தில் 115 வழக்குகள், மேற்கு மண்டலத்தில் 138 வழக்குகள் என மொத்தம் 602 புகார்கள் பதிவு செய்து 57 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன. மேலும் 250 புகார்கள் தொடர் விசாரணை முடித்து தீர்வு காணும் நிலையில் உள்ளன.
சைபர் குற்றங்கள் தொடர்பான வழக்குகளில் பொதுமக்கள் இழந்த ரூ.22,81,682/- ரூபாய் மீட்கப்பட்டு அவர்களது வங்கிக் கணக்கில் திரும்பச் செலுத்தி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குமரன் நகர் காவல் நிலைய எல்லையில் இன்ஸ்டாகிராம் மூலம் பெண்ணைத் துன்புறுத்திய வழக்கில் இளஞ்சிறார் கைது செய்யப்பட்டு சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டார்.
அடையாறு பகுதியில் கடந்த 11.08.2020 பிரான்சிஸ் அந்தோணி பினுகர் என்பவர் ரூ.46,850 ரூபாய் டெபிட் கார்டு மூலம் ஏமாற்றப்பட்டார். உடனடி நடவடிக்கையால் அந்தப் பணம் மீட்டுத் தரப்பட்டது. சென்னை அண்ணா நகர் கிழக்கு பகுதியில் வசிக்கும் பிரசன்னகுமார் என்பவர் எஸ்.பி.ஐ கிரடிட் கார்டு கஸ்டர்மர் சர்வீஸ் எனப் போலியான நபரிடம் கைப்பேசி மூலமாக பேசி ரூ.69,980/- இழந்ததை உடனடி நடவடிக்கையினால் மீட்டுத் தரப்பட்டது.
அதேபோல் 09.09.2020 துரைப்பாக்கம் பகுதியில் டாடா கேபிடல் Feather lite Tec என்ற வேலைவாய்ப்பு கால் சென்டர் என்ற பெயரில் தொடர்புகொண்டு வங்கி லோன் ஏற்பாடு செய்து தருவதாகக் கூறி ரூ.2 லட்சம் பணம் பறிக்க முயன்ற போலி கால் சென்டர் நடத்திய நபர்களைக் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இவ்வாறு பலவிதமான சைபர் குற்ற நிகழ்வுகளில் இதுவரை ரூபாய் 22,81,682/- (ரூபாய் இருபத்திரண்டு லட்சத்து எண்பத்து ஓராயிரத்து அறுநூற்று எண்பத்திரண்டு) மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. விஞ்ஞான வளர்ச்சியில் விவேகத்துடன் சென்னை பெருநகர காவல் துறை பொதுமக்கள் பாதுகாப்பில் உறுதியுடன் செயல்பட்டு வருகிறது”.
இவ்வாறு சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.