

காதல் திருமணம் செய்த அண்ணன் தலைமறைவான விவகாரத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட கல்லூரி மாணவரான தம்பி மறுநாள் மரத்தில் தூக்கிட்ட நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். இதைத் தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்துள்ள மாநில மனித உரிமை ஆணையம், விளக்கம் கேட்டு மதுரை மாவட்ட எஸ்.பி.க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மதுரை மாவட்டம், சாப்டூர் அருகிலுள்ள அணைக்கரைப்பட்டியைச் சேர்ந்தவர் கன்னியப்பன். இவருக்கு இதயக்கனி (25), ரமேஷ் (20) என்கிற 2 மகன்கள் உள்ளனர். கன்னியாகுமரி பகுதியிலுள்ள ஒரு தனியார் கல்லூரியில் ரமேஷ் மூன்றாமாண்டு படித்துவந்தார். கரோனா ஊரடங்கு காரணமாக அவர் சொந்த ஊர் திரும்பியிருந்தார்.
ரமேஷின் அண்ணன் இதயக்கனி சாப்டூர் பகுதியைச் சேர்ந்த 17 வயதுச் சிறுமியைக் காதலித்து அவரைத் திருமணம் செய்வதற்காக, சிறுமியுடன் ஒரு மாதத்திற்கு முன் ஊரைவிட்டு மாயமானார்.
பெண்ணின் உறவினர்கள் அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த சாப்டூர் காவல் நிலைய எஸ்.ஐ. ஜெயக்கண்ணன் தலைமையிலான போலீஸார் இதயக்கனியைத் தேடி வந்தனர். இதயக்கனியின் பெற்றோர், தம்பி ரமேஷையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.
பின்னர் கடந்த 17-ம் தேதி ரமேஷை விசாரணைக்காக சாப்டூர் காவல்நிலைய போலீஸார் அழைத்துச் சென்றனர். விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட ரமேஷ் பின்னர் வீடு திரும்பவில்லை இந்நிலையில் நேற்று காலை அணைக்கரைப் பட்டி அருகிலுள்ள பெருமாள்கொட்டம் என்ற மலையிலுள்ள மரம் ஒன்றில் ரமேஷ் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார்.
போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாணவரின் உடல் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டது அப்பகுதி மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சம்பந்தப்பட்ட காவல் நிலைய எஸ்.ஐ. ஜெயக்கண்ணன், பரமசிவம் உள்ளிட்ட 4 போலீஸார் மீது நடவடிக்கை எடுத்தால்தான் உடலை வாங்குவோம் என அப்பகுதி மக்கள், ரமேஷின் உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
மதுரை மாவட்ட எஸ்.பி. சுஜித்குமார் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். சம்பந்தப்பட்ட போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இந்நிலையில் 4 போலீஸார் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்று மதியம் எஸ்.ஐ.க்கள் ஜெயக்கண்ணன், பரமசிவத்தை சஸ்பெண்ட் செய்து எஸ்.பி உத்தரவிட்டார்.
இந்நிலையில் பத்திரிகைகளில் வந்த செய்தி அடிப்படையில் மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு (SUO-MOTU) செய்துள்ளது. மாணவர் ரமேஷ் மரணம் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 2 வார காலத்திற்குள் உரிய அறிக்கை அளிக்கும்படி மதுரை மாவட்ட எஸ்.பி.க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.