

சிவகங்கை அருகே 42 ஆண்டுகளுக்குப் பிறகு நெற்களத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் மீட்டதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சிவகங்கை அருகே முத்துப்பட்டியில் 600 குடும்பங்கள் உள்ளது. இக்கிராமத்தில் ஆயிரம் ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் உள்ளன. காலப்போக்கில் தொடர் வறட்சி, விவசாயத்தில் போதிய வருவாய் இல்லாதது போன்ற காரணங்களால் பலர் விவசாயத்தை கைவிட்டனர்.
இதனால் கிராமத்தில் இருந்த நெற்களத்தின் பயன்பாடு குறைந்தது. இதை பயன்படுத்தி 42 ஆண்டுகளுக்கு முன்பு நெற்களத்தையும், விவசாய நிலம், கண்மாய்க்கும் செல்லும் பொதுப்பாதையை சிலர் ஆக்கிரமித்தனர். தற்போது கரோனா ஊரடங்கால் பலர் மீண்டும் விவசாயத்தில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்து நெற்களம், பொதுப்பாதையை மீட்க வேண்டுமென, சிவகங்கை வட்டாட்சியர் மைலாவதியிடம் விவசாயிகள் மனு கொடுத்தனர்.
இதையடுத்து நிலஅளவை செய்து 42 ஆண்டுகளுக்கு பிறகு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது நெற்களம், பொதுப்பாதை மீட்கப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.