

நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பாக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தால் அரசு உதவி செய்யத் தயாராக உள்ளது என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
எட்டயபுரத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறும்போது, "அதிமுக அரசு என்றைக்கும் நடிகர் சங்கம் மீது அக்கறை உள்ள அரசாக உள்ளது.
நடிகர் சங்கத் தேர்தல் என்றபோது, அதில் போட்டியிடும் நிர்வாகிகள் என்னை சந்திக்க வந்தனர்.
அப்போது அவர்களிடம் உங்களுக்குள் போட்டி மற்றும் கருத்து வேறுபாடு இல்லாமல் சமாதானமாகப் பேசி ஒட்டுமொத்தமாக ஒருமனதாகத் தேர்தலை நடத்த முன்வந்தால், அந்த பேச்சுவார்த்தைக்கு அரசு உறுதுணையாக இருக்கும் என்ற கருத்தை அரசின் சார்பில் ஏற்கெனவே நான் பலமுறை கூறியுள்ளேன்.
அதைத் தான் இன்று நீதிமன்றமும் கூறியுள்ளது. தேர்தலே தேவையில்லை என்று தான் பலமுறை கூறியுள்ளோம். எனவே, அவர்கள் பேச்சுவார்த்தைக்கு முன்வந்தால், முதல்வரின் அனுமதியைப் பெற்று துறை மூலமாக உதவி செய்யத் தயாராக உள்ளோம்.
எந்த சங்கமாக இருந்தாலும் பதிவுத்துறைக்கு கட்டுப்பட்டது. நடிகர் சங்கம் புதிதாக தொடங்கப்பட்டது அல்ல. ஏற்கெனவே உள்ள சங்கத்துக்கு தான் தேர்தல் நடைபெறுகிறது.
அங்கு ஒரு பிரச்சினை வந்து, யாராவது பதிவாளரிடம் மனு கொடுத்தால், அது தொடர்பாக ஆலோசனை நடத்த வேண்டிய கட்டாயம் அவருக்கு உள்ளது. அந்த வகையில் சட்ட விதிகளைகளின்படி தான் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது" என்றார் அவர்.