

தமிழ்நாட்டைச் சேர்ந்த 40 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் திட்டத்தை திமுகவின் தேர்தல் அறிக்கையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிக்க உள்ளதாக கே.என்.நேரு தெரிவித்தார்.
திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு முன்னிலையில் கல்லூரி மாணவர்கள் 200-க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் இன்று (செப். 19) நடைபெற்றது.
அவர்களிடத்தில் கே.என்.நேரு பேசுகையில், "தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள அதிமுக அரசு, இந்தியாவிலுள்ள யார் வேண்டுமானாலும் தமிழ்நாட்டிலுள்ள அரசு வேலைவாய்ப்புகளைப் பெறலாம் என்ற நிலையை ஏற்படுத்தும் வகையிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதனால் இங்குள்ள ரயில்வே, பிஎஸ்என்எல் உள்ளிட்ட மத்திய அரசு மற்றும் மாநில அரசு அலுவலகங்களில் பிற மாநிலத்தவர்கள் அதிக அளவில் வேலைவாய்ப்புகளைப் பெற்று வருகின்றனர்.
நாம் நேர்மையான முறையில் தேர்வுகளை நடத்துகிறோம். ஆனால், பிற மாநிலங்களில் 'காப்பி' அடிக்க வைத்து, அவர்களைத் தேர்ச்சி பெற வைத்துவிடுகின்றனர். பொன்மலை ரயில்வே பணிமனையில் அதிக அளவிலான வட மாநிலத்தவர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து சட்டப்பேரவையில் பேசினால், பிற மாநிலங்களில் 15 சதவீதம் அளவுக்கு நமக்கு இடம் ஒதுக்குவதாக அமைச்சர்கள் கூறுகிறன்றர். ஆனால், உண்மையில் பிற மாநிலங்களில் அந்தந்த மாநில இளைஞர்களுக்குத்தான் சலுகைகள் வழங்கப்படுகின்றன.
இந்தச் சூழலில், 40 லட்சம் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையிலான திட்டத்தை திமுகவின் தேர்தல் அறிக்கையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிக்க உள்ளார். இளைஞர்களான உங்களுக்கு, நிச்சயம் நாங்கள் வேலைவாய்ப்பை உருவாக்கித் தருவோம். அதற்கு நீங்கள் மு.க.ஸ்டாலினின் கரத்தை வலுப்படுத்த வேண்டும்.
தமிழ்நாட்டில் நீட் தேர்வை அனுமதித்தது பாஜகவும், அதிமுகவும்தான். இதுகுறித்து சட்டப்பேரவையில் பேசுவதற்குக்கூட எங்களுக்கு அனுமதி வழங்குவதில்லை. உங்களால்தான் வந்தது எனக் குற்றம் சாட்டுகின்றனர். மத்திய ஆட்சியுடன் நெருக்கமாக உள்ள அதிமுக, நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்காதது ஏன்?" என்று கே.என்.நேரு கேள்வி எழுப்பினார்.
இந்நிகழ்ச்சியில் மத்திய மாவட்டப் பொறுப்பாளர் வைரமணி, மாநகரச் செயலாளர் மு.அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.