Published : 19 Sep 2020 07:13 PM
Last Updated : 19 Sep 2020 07:13 PM

சொந்த மருத்துவமனை மூலம் 10 ரூபாயில் சிகிச்சை: சித்த மருத்துவர் வீரபாபு பேட்டி

கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் மருத்துவ சிகிச்சைக்காக அரசு ஒதுக்கிய ஜவஹர் கல்லூரி சித்த மருத்துவ மையத்தில் பணியாற்றி, 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகளைக் குணப்படுத்தியவர் சித்த மருத்துவர் வீரபாபு. பாரம்பரிய மருத்துவம், மூலிகை உணவுகள் மூலம் இங்கு விரைவாக நோயாளிகள் குணமடைந்தது, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை அரசு தொடங்க முன்னெடுப்பாக அமைந்தது.

இந்நிலையில் மருத்துவர் வீரபாபு தற்போது புதிதாக 'உழைப்பாளி' என்னும் மருத்துவமனையைத் தொடங்கி, அங்கே 10 ரூபாய்க்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

10 ரூபாயில் மருத்துவமனையை நடத்துவது சாத்தியமா? 'உழைப்பாளி 'உணவகத்தில் 10 ரூபாய்க்கு உணவளிப்பது எப்படி, அரசு சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில் இருந்து விலகியது ஏன் என்பன உள்ளிட்ட கேள்விகளுக்குப் பதிலளித்தார் மருத்துவர் வீரபாபு.

'உழைப்பாளி' மருத்துவமனையைத் தொடங்கியதன் காரணம் என்ன?

பெரும்பாலான மருத்துவமனைகளில் உள்ளே நுழையும்போதே ரூ.500, ரூ.1000 என்று கட்டணம் வாங்குகிறார்கள். ஏழை, எளிய மக்களால் அங்கே சிகிச்சை எடுக்க முடிவதில்லை. அவர்களுக்கு நம்மாலான உதவிகளைச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த மருத்துவமனையை ஆரம்பித்திருக்கிறேன். ஆங்கில மருத்துவ சிகிச்சை உட்பட அனைத்து மருத்துவத்துக்கும் 10 ரூபாய் மட்டுமே வசூலிக்கிறோம். உள் நோயாளிகளுக்காக 25 படுக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

இங்கு கரோனாவுக்கான சிகிச்சை அளிக்கப்படுவதில்லை. மற்ற அனைத்துவிதமான நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கிறோம். மருத்துவமனை தொடங்கிய முதல் நாளில் 110 நோயாளிகள் சிகிச்சைக்காக வந்தனர். மருத்துவ சிகிச்சைக்கான ஆலோசனை வழங்கி, மருந்தை எழுதிக் கொடுத்துவிடுவோம். இதற்கான கட்டணம் 10 ரூபாய்.

உள்நோயாளிகளுக்கு என்ன சிகிச்சைகள் அளிக்கிறீர்கள், எப்படிக் கட்டணம் வசூலிக்கப்படும்?

ஆஸ்துமா, தோல் நோய், கல்லீரல் நோய்கள் போன்ற நாட்பட்ட பிரச்சினைகளைக் கொண்ட நோயாளிகள் இங்கே உள் நோயாளிகளாக அனுமதிக்கப்படுவர். அவர்கள் ஏற்கெனவே எடுத்துக் கொண்ட ஆங்கில மருத்துவத்துடன், சித்த மருந்துகளையும் வழங்கி ஒருங்கிணைந்த சிகிச்சை வழங்கப்படும். தேவைப்படும் வரை ஆங்கில மருந்துகள் கொடுத்தபிறகு, தொடர்ந்து சித்த மருத்துவ சிகிச்சை அளிக்க உள்ளோம். நோயின் தீவிரத்தைப் பொறுத்து அவர்களுக்கு மருந்துகள் வழங்கப்பட்டுக் கட்டணம் வாங்கப்படும்.

ஒரே நேரத்தில் இரண்டு விதமான சிகிச்சையும் எடுத்துக்கொண்டால் பக்க விளைவு ஏற்படும் என்று சிலர் கூறுகிறார்களே..?

நான் பயிற்சி முடித்து இத்தனை ஆண்டுகளாகச் சிகிச்சையும் அளித்து வருகிறேன். இதுவரை யாருக்கும் எந்தப் பக்க விளைவும் ஏற்பட்டதில்லை.

ஏறும் விலைவாசியில், தினந்தோறும் 10 ரூபாய்க்கு உணவளிப்பது எப்படிச் சாத்தியம்?

கடந்த ஆண்டு தொடங்கிய 'உழைப்பாளி 'உணவகத்தில் ஏழைகளுக்கு மட்டுமே 10 ரூபாய்க்குச் சாப்பாடு போடுகிறோம். வசதி படைத்தோருக்கு பணியாரம், கொழுக்கட்டை, புட்டு, முடக்கத்தான் தோசை, கம்பு, சோள, கேழ்வரகு தோசைகளை விற்பனை செய்கிறோம். அதில் கிடைக்கும் லாபத்தை வைத்து இதை ஈடு செய்கிறோம்.

எல்லோருமே உழைப்பவர்கள்தான் என்றாலும் திறமையோடு கூடிய உழைப்பை வைத்து, முன்னேறி, உயரிய இடத்துக்கு வந்தவர் ரஜினி. அவரை முன்னுதாரணமாகக் கொண்டுதான் 'உழைப்பாளி' உணவகத்தைத் தொடங்கினேன்.

ஜவஹர் சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில் இருந்து நீங்கள் விலகுவதற்கு என்ன காரணம்?

கடந்த மூன்றரை மாதங்களாக இரவு, பகலாக உழைத்துவிட்டேன். தற்போது ஓய்வு தேவைப்படுகிறது. மொத்தம் 5,394 நோயாளிகளைச் சித்த மருத்துவ சிகிச்சை மூலம் குணப்படுத்தியுள்ளோம்.

சிகிச்சை அளிக்கும் மருத்துவர் வீரபாபு | கோப்புப் படம்

மருத்துவமனையில் நோயாளிகளுக்கு திடீரென ஆக்சிஜன் தேவைப்படுகிறது. உடனே சிகிச்சை அளித்து காப்பாற்றுகிறோம். இதனால் பெரும்பாலும் பதற்றமாகவே இருக்கும் சூழல் உள்ளது. தினமும் உறங்க 2, 3 மணி ஆகிவிடுகிறது. மருத்துவ நண்பர்கள் எல்லோரும் ரத்த அழுத்தம், சர்க்கரை ஏதாவது வந்துவிடப் போகிறது என்று எச்சரித்தனர். அதனால் ஓய்வு வேண்டும் என்று முடிவெடுத்து, சென்னை மாநகராட்சியிடம் தெரிவித்தேன்.

சென்னை மாநகராட்சியின் இணை ஆணையர் (சுகாதாரம்) மதுசூதன் ரெட்டி ஐஏஎஸ் அழைத்து, ''நல்லாதானே போய்ட்டு இருக்கு.. அரசு மருத்துவரை நியமிக்கற வரைக்கும் சிகிச்சை கொடுங்க'' என்று கூறினார். அதனால் எனது பணியைத் தொடர்ந்தேன். ஆனால் அரசு யாரையும் நியமிக்கவில்லை. அதனால், ஏற்கெனவே இருக்கும் நோயாளிகள் குணமடையும் வரை இருந்து சிகிச்சை அளித்துவிட்டு விலக முடிவு செய்தேன். ஜவஹர் சித்த மருத்துவ மையத்தில் இன்றுடன் (செப்.19) என்னுடைய பணி முடிவடைகிறது.

சிகிச்சைக்காக நோயாளிகளிடம் நீங்கள் அதிகக் கட்டணம் வசூலித்ததாகக் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளதே?

இது பொய்க் குற்றச்சாட்டு. அரசாங்கத்திடம் இருந்து ஒரு பைசா கூட வாங்காமல் 5,394 நோயாளிகளுக்கு எப்படிச் சிகிச்சை அளிக்க முடியும்? இதில் 5,350-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு இலவசமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதை நீங்கள் சிகிச்சை பெற்ற பொது மக்களிடமே கேட்டு உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

வசதியானவர்கள் சிலரிடம் அவர்களுக்கு ஆக்சிஜன் அளிக்கவும் நுரையீரல் தொற்றுக்கு ஆங்கில சிகிச்சை அளிக்கவுமே நியாயமான கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதை முன்கூட்டியே சொல்லித்தான் நோயாளிகளை இங்கே அனுமதித்தோம். இதற்கான ஆவணங்களும் உள்ளன.

இவ்வாறு மருத்துவர் வீரபாபு தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x