உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வேண்டும்: அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி

அன்பில் மகேஷ் பொய்யாமொழி: கோப்புப்படம்
அன்பில் மகேஷ் பொய்யாமொழி: கோப்புப்படம்
Updated on
2 min read

உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என திருச்சி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், எம்எல்ஏவுமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

இது தொடர்பாக, திருச்சியில் இன்று (செப். 19) அன்பில் மகேஷ் பொய்யாமொழி அளித்த பேட்டி:

"திமுகவில் நான் இரட்டைப் பதவி வகிக்கவில்லை. திருச்சி தெற்கு மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட உடனேயே, மாநில இளைஞரணித் துணைச் செயலாளர் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டு விட்டேன்.

வரக்கூடிய சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக அதிக தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் கூறி வருகிறோம். 200 தொகுதிகளில் நிற்க வேண்டுமென உதயநிதி கூறியுள்ளார். நாங்களும் அதை விரும்புகிறோம். இறுதி முடிவை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்தான் எடுக்க வேண்டும்.

உதயநிதி: கோப்புப்படம்
உதயநிதி: கோப்புப்படம்

கடந்த தேர்தலில் கூட்டணிக் கட்சியினரை இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட வைத்தார் ஜெயலலிதா. அதுபோல, திமுகவிலும் கூட்டணி வேட்பாளர்களையும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைக்கலாம் எனச் சிலர் கூறினர். ஆனால், தலைவர் ஏற்றுக் கொள்ளவில்லை. இது அவரவர் விருப்பம், அதில் நாம் தலையிடக்கூடாது எனத் தெளிவாகக் கூறிவிட்டார். வரக்கூடிய தேர்தலுக்கு இன்னும் காலம் இருப்பதால், இதுபற்றிப் பேச வேண்டிய தேவையே எழவில்லை.

தேர்தல் கூட்டணி தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உட்பட ஒவ்வொரு கட்சித் தலைவருக்கும் ஒரு கருத்து இருக்கும். எனினும் அனைத்துத் தோழமைக் கட்சிகளுடனும் நாங்கள் இணைந்து செயல்பட்டு வருகிறோம். அனைவரும் மு.க.ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே உள்ளனர்.

அதிமுகவில் நிலவக்கூடிய உட்கட்சி பிரச்சினை குறித்து கருத்து கூற விரும்பவில்லை.

வரக்கூடிய தேர்தலில் நான் எந்தத் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பதை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முடிவெடுப்பார். உதயநிதி ஸ்டாலின் இத்தேர்தலில் போட்டியிட வேண்டும் என நான் உட்பட பலர் விரும்புகிறோம். போட்டியிடுவாரா எனத் தெரியவில்லை.

பாஜக துணைத் தலைவர் அண்ணாமலையுடன் விவாதத்துக்குச் செல்ல திமுகவினர் யாரும் தயங்கவில்லை".

இவ்வாறு அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

இதற்கு முன்பு, திமுக இளைஞரணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலினை நியமிக்க வேண்டும் என அன்பில் மகேஷ் பொய்யாமொழி விருப்பம் தெரிவித்தார். பிறகு, ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் திமுகவினர் வரிசையாகத் தீர்மானம் நிறைவேற்றினர். அதன்பின் உதயநிதிக்கு இளைஞரணிச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. அதேபோன்று, தற்போது உதயநிதி ஸ்டாலின் தேர்தலில் போட்டியிட வேண்டும் என அவரது நண்பரான அன்பில் மகேஷ் பொய்யாமொழி விருப்பம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in