தென்காசி மாவட்டத்தில் நெல் சாகுபடி பணி தொடக்கம்: நிலத்தை தயார் செய்யும் விவசாயிகள்

தென்காசி மாவட்டத்தில் நெல் சாகுபடி பணி தொடக்கம்: நிலத்தை தயார் செய்யும் விவசாயிகள்
Updated on
1 min read

தென்காசி மாவட்டத்தில் நெல் சாகுபடி பணி தொடங்கியுள்ளது. விவசாயிகள் நிலத்தைத் தயார் செய்யும் பணியையும் தொடங்கியுள்ளனர்.

தென்காசி மாவட்டத்தில் இந்த ஆண்டு தெற்மேற்கு பருவமழை குறித்த காலத்தில் தொடங்கியது.

இருப்பினும், ஜூன், ஜூலை மாதங்களில் போதிய மழை பெய்யவில்லை. அணைகள், குளங்களில் நீர்மட்டம் போதிய அளவு இல்லாததால் கார் சாகுபடி பணிகள் பாதிக்கப்பட்டது.

அடவிநயினார், கருப்பாநதி, கடனாநதி, ராமநதி அணைப் பாசன நிலங்களில் பெரும்பாலான விவசாயிகள் கார் சாகுபடி பணியை கைவிட்டனர். ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் தொடர் மழை பெய்ததால் தென்காசி மாவட்டத்தில் உள்ள 5 அணைகளிலும் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. பல்வேறு குளங்களுக்கும் நீர் வரத்து கிடைத்தது.

கார் சாகுபடி ஏமாற்றம் அளித்த நிலையில், பிசான சாகுபடியை முன்கூட்டியே தொடங்க விவசாயிகள் ஆயத்தமாகி வருகின்றனர்.

மேற்குத்தொடர்ச்சி மலையையொட்டி உள்ள மேலகரம், நன்னகரம், சிந்தாமணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குளங்களில் தண்ணீர் இருப்பதால், பிசான சாகுபடி பணிக்கு விவசாயிகள் ஆயத்தமாகி வருகின்றனர்.

இதேபோல், அடவிநயினார், கருப்பாநதி உள்ளிட்ட அணைப் பாசனங்களில் உள்ள விவசாய நிலங்களிலும் நாற்றங்கால் தயார் செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

விதைப்புப் பணி சில நாட்களில் அதிகரிக்கும் என்பதால் விதை விற்பனை நிலையங்களில் நெல் விதைகளை வியாபாரிகள் வாங்கி இருப்பு வைத்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in