

அதிமுகவின் ஆலோசனைக் கூட்டத்தில் சுவாரசியம் மட்டுமே இருந்ததாக, தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று (செப். 18) மாலை உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. துணை ஒருங்கிணைப்பாளர்கள் முனுசாமி, வைத்திலிங்கம், அமைச்சர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் இதில் பங்கேற்றனர்.
முன்னதாக, இக்கூட்டத்தில் பங்கேற்க துணை முதல்வர் ஓபிஎஸ் வந்தபோது அவருக்கு ஆதரவாக அவருடைய ஆதரவாளர்கள் கோஷமிட்டனர். தொடர்ந்து, முதல்வர் பழனிசாமி வந்தபோது, அவரது ஆதரவாளர்கள் கோஷமிட்டனர். ஏற்கெனவே முதல்வர் வேட்பாளர் குறித்த சர்ச்சை எழுந்துள்ள நிலையில், தொண்டர்களின் இந்த முழக்கம் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் இன்று (செப். 19) அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, இக்கூட்டம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், "அதிமுகவுக்கு எதிராக எவ்வளவோ எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. சதிகள் நடந்துள்ளன. அதனை முறியடித்துள்ளோம். அதேபோன்று வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் மகத்தான வெற்றியைப் பெறும் வகையில் அதிமுகவின் உழைப்பு இருக்கும். அந்த அடிப்படையில்தான் நேற்றைய கூட்டத்தில் விவாதங்கள் நடைபெற்றன.
மற்றவர்கள் சொல்வதுபோல் காரசாரமான விவாதம் நடைபெறவில்லை. காரமும் இல்லை, ரசமும் இல்லை. சுவாரசியம் மட்டும்தான் இருந்தது" எனத் தெரிவித்தார்.