

டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கடலூரில் அனைத்து கட்சியினர் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுபிரியா கடந்த 18-ம் தேதி தனது அலுவலகத்துடன் கூடிய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் நேற்று முன்தினம் இரவு சொந்த ஊரான கடலூர் கோண்டூருக்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து பல் வேறு தரப்பினர் அஞ்சலி செலுத்தினர்.
திமுக சார்பில் மாநில மாண வரணி செயலாளர் இள புகழேந்தி, நகர செயலாளர் ராஜா, தேமுதிக எம்எல்ஏக்கள் முத்துகுமார், சிவக் கொழுந்து, விடுதலைச் சிறுத் தைகள் கட்சி மாவட்ட செயலாளர் தாமரைச்செல்வன் மற்றும் மதி முகவினர், தமிழக வாழ்வுரிமை கட்சியினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், பொதுநல அமைப்பினர், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் கோண்டூரில் கடலூர்- பண்ருட்டி பிரதான சாலையில் அனைத்து கட்சியின ரும், பொதுமக்களும் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் விஷ்ணுபிரியாவின் உறவினர் களும் கலந்து கொண்டனர்.
மறியலில் ஈடுபட்டவர்களிடம் டிஎஸ்பிக்கள் ராமமூர்த்தி, இளங்கோவன் மற்றும் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் போராட்டக்காரர்களுக்கும் போலீஸாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது டிஎஸ்பி விஷ்ணு பிரியா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். போலீஸார் போராட்டக்காரர்களிடம், இந்த பிரச்சினையில் உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் அதற் கான வழிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருவதாகவும் கூறினர். ஆனால் போராட்டத்தை கைவிட அவர்கள் மறுத்தனர். இதையடுத்து போலீஸார் அவர் களை அப்புறப்படுத்தினர். இதற்கிடையே விஷ்ணு பிரியாவின் உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கோண்டூர் தென் பெண்ணை ஆற்றங்கரையில் அடக்கம் செய்யப்பட்டது.