

கரோனா ஊரடங்கு தளர்வுக்குப் பின்னரும் தென்காசி பழைய பேருந்து நிலையத்தில் பேருந்து போக்குவரத்தும், காய்கறி சந்தையும் சேர்ந்து செயல்பட்டு வருவதால் வியாபாரிகள், பயணிகள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டது.
இருப்பினும், காய்கறி சந்தைகளில் வழக்கம்போல் கூட்டம் அலைமோதியது. பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், காலியாக இருந்த பேருந்து நிலையங்கள், திறந்தவெளி மைதானங்களுக்கு காய்கறி சந்தைகள் இடமாற்றம் செய்யப்பட்டன. அதன்படி, தென்காசியில் உள்ள காய்கறி சந்தை தென்காசி பழைய பேருந்து நிலையத்துக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில், கடந்த 1-ம் தேதி முதல் பேருந்து போக்குவரத்து தொடங்கியது. இதனால், பேருந்து நிலையங்களில் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. பல்வேறு இடங்களில் பேருந்து நிலையங்களில் செயல்பட்ட காய்கறி சந்தைகள் மீண்டும் பழைய இடத்துக்கே மாற்றப்பட்டன.
ஆனால், தென்காசி பழைய பேருந்து நிலையத்தில் பேருந்து போக்குவரத்தும், காய்கறி சந்தையும் சேர்ந்து செயல்பட்டு வருகிறது.
பேருந்து நிலையம் முழுவதும் காய்கறி கடைகள் செயல்பட்டு வருவதால், பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் இட வசதியின்றி கால் வலிக்க நின்றுகொண்டே காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதேபோல், பேருந்துகள் வந்து செல்வதால், வியாபாரிகள் மற்றும் காய்கறிகள் வாங்க வரும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுகிறது.
எனவே, தென்காசி பழைய பேருந்து நிலையத்தில் செயல்படும் தற்காலிக காய்கறி சந்தையை மீண்டும் தென்காசி- திருநெல்வேலி சாலையில் உள்ள நகராட்சி சந்தைக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்று வியாபாரிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
பயணிகள் கூட்டம், காய்கறி வியாபாரிகள் மற்றும் காய்கறி வாங்க வரும் பொதுமக்களால் கூட்டம் அதிகரித்து வருகிறது. அனைத்துத் தரப்பினருக்கும் இடையூறு ஏற்படுகிறது.
இதற்கு தீர்வு காண காய்கறி சந்தையை மீண்டும் பழைய இடத்துக்கே மாற்ற வேண்டும் பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர்.
மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்காசி நகராட்சி நிர்வாகம் இது தொடர்பாக விரைந்து செயல்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வியாபாரிகள் கூறுகின்றனர்.