Last Updated : 19 Sep, 2020 01:54 PM

 

Published : 19 Sep 2020 01:54 PM
Last Updated : 19 Sep 2020 01:54 PM

உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இடவசதியின்றி தவிக்கும் அரசு வழக்கறிஞர்கள்

உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அரசு வழக்கறிஞர் அலுவலகத்தில் போதிய இடவசதி இல்லாததால் அவர்களில் பலர் வீடுகளில் இருந்து ஆஜராகி வருகின்றனர்.

உயர் நீதிமன்றக் கிளையில் 73 அரசு வழக்கறிஞர் பணியிடங்கள் உள்ளன. இதில் 36 பணியிடங்கள் நீண்டகாலமாக காலியாக இருந்த நிலையில், சில வாரங்களுக்கு முன்பு 2-வது கூடுதல் அட்வகேட் ஜெனரல் உள்பட 24 பேர் அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கப்பட்டனர்.

உயர் நீதிமன்றக் கிளையில் அரசு வழக்கறிஞர் அலுவலகத்தில் (லா ஆபிஸ்) தரைத்தளத்தில் கூடுதல் அட் வகேட் ஜெனரல்கள், குற்றவியல் அரசு வழக்கறிஞர்கள் அறை, அலுவலக அறை, குற்றவியல் வழக்கு ஆவண அறைகள் உள்ளன. முதல் தளத்தில் உரிமையியல் வழக்குகளுக்கான ஆவண அறை, அலுவலகம், அரசு வழக்கறிஞர்கள் அறைகள் உள்ளன. உயர் நீதிமன்றக் கிளையில் கரோனா ஊரடங்கால் தற்போது காணொலி மூலம் விசாரணை நடந்து வருகிறது. இதனால் அனைத்து அரசு வழக்கறிஞர்களும் தவறாமல் தினமும் அலுவலகம் வருகின்றனர். இருப்பினும் அவர்கள் அமர போதிய இட வசதியில்லை.

அரசு வழக்கறிஞர்களுக்கான அறைகளில் போதிய இடைவெளியுடன் அதிகபட்சம் 4 பேர் அமரும் வகையிலேயே இடவசதியுள்ளது. இருப்பினும், ஒவ்வொரு அறையிலும் 6 பேருக்கு மேல் அமர்ந்துள்ளனர். பல அரசு வழக்கறிஞர்கள் அலுவலக அறையில் அலுவலர்கள், ஊழியர்களுக்கு மத்தியில் இருக்கை போட்டு பணி செய்கின்றனர். இதனால் வழக்கு சம்பந்தமாக அதிகாரிகளிடம் தக வல் பெறுவது உள்ளிட்டவற்றில் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன.

மேலும், காணொலி விசாரணையின்போது நீதிபதிகள் பேசுவது சரியாகக் கேட்காமலும், இவர்கள் பேசுவது நீதிபதிகளுக்கு சரியாக கேட்காத சூழலும் உள்ளது. இதனால் பல அரசு வழக்கறிஞர்கள் வீடுகளில் இருந்து ஆஜராகி வருகின்றனர். சில அரசு வழக்கறிஞர்கள் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படும்போது மட்டும் அலுவலகம் வந்து காணொலியில் ஆஜராகின்றனர்.

கரோனா ஊரடங்கால் உயர் நீதிமன்றக் கிளையில் உள்ள வழக்கறிஞர்களின் அறைகளை (லா சேம்பர்) திறக்கத் தடை விதிக்கப்பட்டிருப்பதால் அங்குள்ள தங்களின் அறையிலிருந்து பணிபுரிய முடியாத நிலையில் அரசு வழக்கறிஞர்கள் உள்ளனர்.

அரசு வழக்கறிஞர்கள் அலுவலகத்தின் 2-வது தளம் தற்போது திறந்த வெளியாக உள்ளது. அதில் தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில் இருப்பது போல் கட்டிடம் கட்டினால் அனைத்து அரசு வழக்கறிஞர்களுக்கும் போதுமான இடவசதி கிடைக்கும். எனவே அரசு வழக்கறிஞர்கள் அலுவலக மாடியில் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கு போதுமான நிதி ஒதுக்கீடு செய்து உடனடியாக பணியைத் தொடங்க வேண்டும் என அவர்கள் அரசை வலியுறுத்தி உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x