

தேனி மாவட்டம் போடியைச் சேர்ந்த மணி, உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:
போடி அருகே அம்மாபட்டியில் உள்ள மீனாட்சியம்மன் கண்மாயில் 3 ஆண்டுகளுக்கு மீன் வளர்ப்பு குத்தகைக்கான அனுமதி போடி மீனவர் கூட்டுறவுச் சங்கத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், விதிப்படி விலை நிர்ணயம் செய்யவில்லை.
கடந்த முறை அதிகத் தொகைக்கு மீன்பிடி ஏலம் விடப்பட்டது. தற்போதைய ஏலத்தால் அரசுக்கு ரூ.1.10 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, மீனவர் கூட்டுறவுச் சங்கத்துக்கு வழங்கிய மீன்பிடி ஏலத்தை ரத்து செய்து புதிதாக ஏலம் விட உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்தார். மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் லஜபதிராய் வாதிட்டார்.
பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவு: மீன்பிடி ஏலம் மிகக் குறைந்தத் தொகைக்கு வழங்கப்பட்டுள்ளது. கண்மாயின் மீன்பிடி உரிமைக்காக புதிய ஏலம் விட மீன்வளத் துறைச் செயலர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீர்நிலைகளில் மீன் வளர்ப்பு தொடர்பாக சாகித்ய அகாதமி விருதுபெற்ற எழுத்தாளர் சோ.தர்மன் எழுதியதை சமூக வலைதளங்களில் காண முடிந்தது. அதில் அவர், `கால்நடைகள் தாகத்துக்கு தண்ணீர் பருக முடியவில்லை. பறவைகள் வெடி வைத்து விரட்டப்படுகின்றன. தண்ணீர் கிடைக்காமல் வாயில்லா ஜீவன்களின் வயிற்றெரிச்சல் ஆட்சி யாளர்களைச் சுட்டெரிக்கும்.
தயவு செய்து கண்மாய் களை குத்தகைக்கு விட்டு கம்பெனியாக்குவதை நிறுத்துங்கள். கண்மாய்களும், நீர் நிலைகளும், ஒரு நாட்டின் ரத்த நாளங்கள் என்பதை பகுத்தறிவு உங்களுக்குச் சொல்லவில்லையா,' எனக் குறிப்பிட்டுள்ளார். எனவே, இவரது உணர்வுகளை மையமாகக் கொண்டு மீன் குத்தகை தொடர்பான விதிகளை அரசு மாற்றி அமைக்க வேண்டும். தமிழர்கள் பல்லாண்டு காலமாக கடைப்பிடித்து வரும் பழக்க வழக்கம் மற்றும் உரிமைகளை மதிக்க வேண்டும் என மீன்பிடி குத்தகைதாரர்களுக்கு அரசு உத்தரவிட வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.