Published : 19 Sep 2020 01:38 PM
Last Updated : 19 Sep 2020 01:38 PM

மதுரை இளைஞர் மர்ம மரணம் விவகாரம்: சாப்டூர் எஸ்.ஐ ஜெயக்கண்ணன் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம்

மதுரையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் போலீஸ் விசாரணைக்கு சென்றுவந்த நிலையில் மர்ம்மாக இறந்த சர்ச்சை தொடர்பாக
சாப்டூர் காவல் உதவி ஆய்வாளர் ஜெயக்கண்ணன் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றபட்டுள்ளார்.

இளைஞர் மரணம் தொடர்பாக எஸ்.ஐ. ஜெயக்கண்ணனை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் மூன்றாவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், சாப்டூர் எஸ்.ஐ ஜெயக்கண்ணனை கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றி அம்மாவட்ட எஸ்.பி சுஜித்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், மற்ற காவலர்கள் மீது விசாரணைக்கு பிறகே நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம், சாப்டூர் அருகிலுள்ள அணைக்கரைப்பட்டியைச் சேர்ந்தவர் கன்னியப்பன். இவரது மகன்கள் இதயக்கனி(25), ரமேஷ் (20). கன்னியாகுமரி பகுதியிலுள்ள ஒரு தனியார் கல்லூரியில் ரமேஷ் மூன்றாமாண்டு படித்தார்.

ஓரிரு தினத்துக்கு முன்பு இதயக்கனி சாப்டூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை கடத்திக் கொண்டு போய் திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் சாப்டூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் போலீஸார் விசாரணையைத் தொடங்கினர்.

இந்நிலையில் இதயக்கனியின் திருமணம் தொடர்பாக ரமேசை போலீஸார் விசாரணைக்கு அழைத்துள்ளனர். ஆனால் விசாரணைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது.

மறுநாள் காலை அணைக்கரைப் பட்டி அருகிலுள்ள பெருமாள்கொட்டம் என்ற மலையிலுள்ள மரம் ஒன்றில் ரமேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. சம்பவ இடத்திற்குச் சென்ற போலீஸார், மாணவர் ரமேஷின் உடலை மீட்டு, உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர்.

போலீஸ் விசாரணையில் தாக்கப்பட்டதால் இளைஞர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது விசாரணைக்குச் செல்ல அச்சப்பட்டு தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது.

எஸ்.ஐ ஜெயக்கண்ணன் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால் உறவினர்களோ போலீஸ் துன்புறுத்தல் காரணமாகவே ரமேஷ் இறந்ததாகக் கூறி ஜெயக்கண்ணன் உள்ளிட்ட காவலர்களை கைது செய்யக்கோரி 3-ம் நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x