சென்னையில் விடிய விடிய மழை: மாம்பலத்தில் 8 செ.மீ பதிவு

சென்னையில் விடிய விடிய மழை: மாம்பலத்தில் 8 செ.மீ பதிவு
Updated on
1 min read

வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக சென்னையில் நேற்றிரவு மழை வெளுத்து வாங்கியது. மாம்பலத்தில் 8 செ.மீ, பெரம்பூர், தரமணியில் 7 செ.மீ, நுங்கம்பாக்கத்தில் 6 செமீ பதிவானது.

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, கோயம்புத்தூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், புதுவையில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் நேற்று நள்ளிரவில் சென்னை முழுவதும் பல இடங்களில் பரவலாக மழை பெய்தது.

அடையாறு, திருவான்மியூர், தி.நகர், நுங்கம்பாக்கம், வேளச்சேரி, வடபழனி, சாலிகிராமம், விருகம்பாக்கம், கோயம்பேடு, கே.கே.நகர், அசோக் நகர் , எழும்பூர், பெரம்பூர், திருவொற்றியூர், ராயபுரம், காசிமேடு, தண்டையார்பேட்டை, பெரம்பூர் , மாதவரம், திருவிக நகர், கொளத்தூர் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

சென்னை புறநகர் பகுதிகளான குன்றத்தூர், போரூர் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. நள்ளிரவில் ஆரம்பித்த மழை சில இடங்களில் அதிகாலை வரை நீடித்தது.

இதேபோன்று சென்னையின் பக்கத்து மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்தது. சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் இன்றும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் பரவலாக பெய்த மழை அளவை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. மொத்த சராசரியாக 67 மி.மீ. மழை பெய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாம்பலத்தில் 8 செ.மீ மழையும், பெரம்பூர், தரமணி பகுதியில் 7 செ.மீ மழையும், நுங்கம்பாக்கத்தில் 6 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. புழல் பகுதியில் 9 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in