

சதுரகிரி மலைப் பகுதியில் உள்ள காட்டாறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பக்தர்கள் உற்சாகமாகவும், ஆனந்தமாகவும் குளித்து மகிழ்ந்து சென்றனர்.
விருதுநகர்- மதுரை மாவட்ட எல்லைப் பகுதியில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந் துள்ளது சதுரகிரி மலை. சுமார் 4,200 அடி உயரத்தில் உள்ள இம்மலை யில் சித்தர்களால் பூஜிக்கப்பட்ட சுயம்பு லிங்கங்களான சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோயில்கள் உள்ளன.
மகாளய அமாவாசையை முன்னிட்டு கடந்த 15-ம் தேதி முதல் 18-ம் தேதி (நேற்று) வரை சதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. மகாளய அமாவாசை தினமான நேற்று முன்தினம் ஒரே நாளில் சுமார் 11 ஆயிரம் பக்தர்கள் சதுரகிரி மலையில் குவிந்தனர். தொடர்ந்து நேற்றும் ஆயிரக்கணக்கானோர் சதுரகிரி சென்றனர்.
சதுரகிரி மலை அடிவாரப் பகுதியான தாணிப்பாறையில் திரண்ட பக்தர்கள் வெப்ப நிலை சோதனைக்கு பிறகே மலையேற அனுமதிக்கப்பட்டனர். சதுரகிரி மலைப் பாதையில் ஏராளமான ஓடைகள், காட்டாறுகள் உள்ளன. சில மாதங்களாக கடும் வறட்சியால் காட்டாறுகள் வறண்டிருந்தன. சில நாட்களாக மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் பெய்த சாரல் காரணமாக, சதுரகிரி மலை பகுதி காட்டாறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நாவல் ஊற்று, குட்டைகளிலும் தண் ணீர் நிரம்பியுளளது. நாவல் மரத்தின் வேரிலிருந்து ஊற்று வருவதால் அந்த நீர் சற்று துவர்ப்பாகவும், அருந்துவதற்கு தூய்மையானதாகவும் இருப்பதால் மலையேறும் பக்தர்கள் ஊற்றுநீரை அருந்துவதோடு, பாட்டிலிலும் எடுத்துச் செல்கின்றனர்.
வழுக்குப் பாறை, மாங்கனி ஓடை, சங்கிலிப் பாறை ஓடை, கோரக்கர் குகை காட்டாறு, பிலா வடிக் கருப்பசாமி கோயில் ஓடை, சந்தன மகாலிங்கம் கோயில் அருகேயுள்ள ஓடைகளில் நீர்வரத்து காணப்பட்டது. இந்த காட்டாறுகள் மற்றும் சிற்றோடைகளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குளித்து மகிழ்ந்தனர். மலைப் பகுதியில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதால் அசம்பாவிதம் நிகழாமல் தடுக்க காட்டாறுகள், ஓடைகள் அருகே தீயணைப்புத் துறையினர் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தனர்.