செப். 21-ம் தேதி ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்; மூன்று வேளாண் சட்டங்கள் குறித்து ஆலோசனை

மு.க.ஸ்டாலின்: கோப்புப்படம்
மு.க.ஸ்டாலின்: கோப்புப்படம்
Updated on
1 min read

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள மூன்று வேளாண் சட்டங்கள் குறித்து ஆலோசிக்க, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 21-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என, திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் 3 வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டதை அடுத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. பாஜகவுடன் கூட்டணியில் உள்ள சிரோன்மணி அகாலிதள எம்.பி.யும் மத்திய உணவு பதப்படுத்துல்ஆதல் துறை அமைச்சருமான ஹர்சிம்ரத் கவுர் பாதல் ராஜினாமா செய்தார்.

மேலும், கடும் எதிர்ப்புகளை அடுத்து பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சிகளின் தவறான பிரச்சாரங்களுக்கு இரையாக வேண்டாம் எனத் தெரிவித்துள்ளார் .

மூன்று வேளாண் சட்டங்களும் விவசாயிகளுக்கு எதிரானவை, கார்ப்பரேட்டுகளுக்கு, தனியார்களுக்குச் சாதகமானவை, விவசாயத்தையும், நாட்டின் உணவுப் பாதுகாப்பையும் அழிப்பவை என்று கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

இச்சட்டங்களை ஆரம்பத்தில் இருந்து எதிர்த்து வரும் திமுக, பாஜகவையும், இச்சட்டங்களுக்கு ஆதரவளித்த அதிமுகவையும் கடுமையாக விமர்சித்துள்ளது.

இந்நிலையில், இச்சட்டங்கள் குறித்து ஆலோசிக்க, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 21-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என, திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, திமுக தலைமைக் கழகம் இன்று (செப். 19) வெளியிட்டுள்ள அறிவிப்பில், "திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், வரும் 21-ம் தேதி, திங்கள்கிழமை அன்று காலை 10.30 மணி அளவில், சென்னை, அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு விரோதமாக நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ள மூன்று சட்டங்கள் குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என, அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in