

கரூர் காந்திகிராமத்தைச் சேர்ந்த வர் மோகனம்பாள்(48) இவரது மகள் ஹேமா(28). மகன் முரளி(21)
கோவையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வரும் முரளி ஈரோடு மாவட்டம் சிவகிரியைச் சேர்ந்த பொன்காவியா(21) என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், செப்.10-ம் தேதி முரளி, பொன் காவியா ஆகிய இருவரையும் காணவில்லை.
இதுகுறித்து விசாரிக்க ஹேமாவின் கணவர் அருண் குமாரை கடந்த 3 நாட்களுக்கு முன் சிவகிரி போலீஸார் அழைத்து சென்றுள்ளனர். சிவகிரி போலீஸாரிடம் கேட்ட போது, விசாரணை முடிந்து அருண்குமாரை வீட்டுக்கு அனுப்பி விட்டதாக தெரிவித்துள்ளனர். ஆனால், அருண்குமார் நேற்று வரை வீடு திரும்பவில்லை.
இதையடுத்து, தனது கணவரை மீட்டு தரக்கோரி ஹேமாவும், அவரது தாய் மோகனாம்பாளும் ஆட்சியரிடம் மனு அளிக்க கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு நேற்று வந்துள்ளனர். அங்கு அலுவலக வராண்டாவில் ஆட்சியர் த.அன்பழகன் அதிகாரிகளிடம் பேசிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது, அங்கு வந்த ஹேமா, மோகனாம்பாள் இருவரும் தங்கள் மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக்கொள்ள முயன்றனர். அருகில் இருந்த ஆட்சியர் த.அன்பழகன், அதிகாரிகள் மீதும் மண்ணெண்ணெய் தெறித்தது.
இதைக்கண்ட போலீஸார் அவர்களை பிடித்து, தீக்குளிக்கும் முயற்சியை தடுத்து நிறுத்தினர்.
பின்னர், இதுகுறித்து ஆட்சியர் த.அன்பழகன், காவல் கண்காணிப்பாளர் பொன்.பகலவனிடம் பேசி, ஹேமாவின் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.