

இலங்கை மீதான போர்க்குற்றம் தொடர்பாக ஐ.நா.சபையில் அமெரிக்கா தாக்கல் செய்துள்ள தீர்மானம் அதிர்ச்சியும் ஏமாற்றமும் அளிப்பதாக உள்ளது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக இளைஞர் அணித்தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கூறியுள்ளனர்.
இதுதொடர்பாக வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஜெனீவா மனித உரிமைக் கவுன்சிலின் 30-வது அமர்வில் மனித உரிமை ஆணையர் தாக்கல் செய்த அறிக்கையும், 2014-ல் மனித உரிமை ஆணையர் நியமித்த மூவர் குழுவின் அறிக்கையும் இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதை ஓரளவு வெளிச்சத்துக்கு கொண்டுவந்தன. அதனை அடியோடு நாசம் செய்யும் விதத்தில் அமெரிக்க அரசு தற்போது வரைவுத் தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளது.
இலங்கையில் ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டு விட்டதாக வும், நீதித்துறை சரி செய்யப்பட்டு விட்டதாகவும் தமிழர் பகுதிகளுக்கு எது தேவையோ அது தரப்படும் என்றும் தீர்மானத்தில் சொல்லப்பட்டுள்ளது. தமிழர்கள் வாழும் பகுதியிலிருந்து சிங்கள ராணுவத்தை வெளியேற்றுவது குறித்தோ, சிங்கள ராணுவம் தமிழர்களை கொன்று குவித்தது குறித்தோ எதுவும் சொல்லப்படவில்லை.
தமிழக சட்டமன்றத்தில் இது குறித்து சமீபத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தை அங்கீகரித்து இந்திய அரசு எவ்வாறு செயல்படப் போகிறது என்பதை தமிழ்நாடு கவனித்துக் கொண்டிருக்கிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இலங்கை மீதான போர்க்குற்றம் தொடர்பாக ஐ.நா.சபையில் அமெரிக்கா தாக்கல் செய்துள்ள தீர்மானம் அதிர்ச்சியும் ஏமாற்றமும் அளிப்பதாக உள்ளது. மேலும்,இத்தீர்மானம் தமிழர்களுக்கு நிச்சயம் நீதியைப் பெற்றுத் தராது. இலங்கை மீதான போர்க்குற்றங்களை சர்வதேச விசாரணை செய்ய வேண்டுமென்று உலகம் முழுவதுமுள்ள தமிழர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால்,அமெரிக்கா தாக்கல் செய்துள்ள வரைவுத் தீர்மானத்தில் இலங்கைக்கு ஆதரவான அம்சங்களே இடம் பெற்றுள்ளன. தமிழர்களுக்கு அமெரிக்கா நீதியைப் பெற்றுத் தராது என்பது உறுதியாகிவிட்ட நிலையில்,அந்தக் கடமை மற்றும் பொறுப்பை இந்திய அரசு ஏற்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.