

நீலகிரி பூண்டு விலை உச்சம் தொட்டு வரும் நிலையில், இடைத்தரகர்கள் தலையீட்டால் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தபடியாக, மலைக் காய்கறிகள் விவசாயம் நடைபெறுகிறது. அதேபோல, சில விவசாயிகள் பூண்டு சாகுபடியிலும் ஈடுபட்டுள்ளனர். ஏப்ரல் முதல் ஜூன் வரை முதல் போகத்தில் 2,000 ஏக்கரிலும், அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை இரண்டாவது போகத்தில் 1,000 ஏக்கரிலும் பூண்டு சாகுபடி செய்யப்படுகிறது. ஆண்டுக்கு சராசரியாக 20 ஆயிரம் டன் உற்பத்தியாகிறது.
நீலகிரி பூண்டுக்கு வட மாநிலங்களில் அதிக வரவேற்பு உள்ளது. மேட்டுப்பாளையம் மண்டிகளுக்கு மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, கேரளா மாநிலங்களில் இருந்து அதிக எண்ணிக்கையிலான வியாபாரிகள் வந்து, மலைப் பூண்டு வாங்கிச் செல்கின்றனர்.
தற்போது நீலகிரி பூண்டு கிலோ ரூ.350 முதல் ரூ.450 வரை விற்பனையாகிறது. இதுகுறித்து பூண்டு வியாபாரிகள் கூறும்போது, ‘‘நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பதால், ஹோட்டல்கள், வீடுகளில் பூண்டு பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. இதனால், கடந்த இரண்டு மாதங்களாக கிலோ ரூ.350 முதல் ரூ.450 ரூபாய் வரை விற்கப்படுகிறது’’என்றனர்.
இந்நிலையில், பூண்டு விற்பனையில் இடைத்தரகர்களே அதிக அளவில் பயனடைவதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து மலைப் பூண்டு விவசாயிகள் கூறும்போது, ‘‘அரசின் கொள்முதல் மையமான நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கத்துக்கு காய்கறிகள், பூண்டு போன்றவற்றை கொண்டுசெல்வதை இடைத்தரகர்கள் தடுக்கின்றனர். இதனால், நீலகிரி மாவட்ட விவசாயிகள், தங்களது விளை பொருட்களை இடைத்தரகர்களிடம் கொடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். அவர்கள் நிர்ணயிக்கும் விலையைத்தான் பெற வேண்டியுள்ளது. வெளி மாநிலங்களில் இருந்து வரும் வியாபாரிகளை இடைத்தரகர்கள் தடுத்து விடுகின்றனர்.
எனவே, இடைத்தரகர்களிடமிருந்து விவசாயிகளைக் காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.
நீலகிரி மாவட்ட காய்கறி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் ரங்கசாமி கூறும்போது, ‘‘நீலகிரி மாவட்டத்திலிருந்து ஆண்டுதோறும் சுமார் 20 ஆயிரம் டன் அளவுக்கு மலைப் பூண்டு மேட்டுப்பாளையத்துக்கு விற்பனைக்கு கொண்டுசெல்லப்படுகிறது. இவற்றை வட மாநில விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் விதைக்காக கொள்முதல் செய்கின்றனர்.
மேட்டுப்பாளையத்தில் உள்ள நீலகிரி கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் பல ஆண்டுகளாக பூண்டு விற்பனை நிறுத்தப்பட்டிருந்தது. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மீண்டும் பூண்டு விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. இங்கு கமிஷன் தொகையாக ரூ.3 மட்டுமே பெறப்படுகிறது. பணம் உடனுக்குடன் பட்டுவாடா செய்யப்படுகிறது.
இதனால், நீலகிரி மாவட்ட பூண்டு விவசாயிகள் அங்கு விற்பனைக்காக மலைப்பூண்டு கொண்டு செல்கின்றனர். அதேசமயம், தனியார் மண்டிகளில் 10 சதவீத கமிஷன் தொகை பெறப்படுகிறது. வெளி மாநிலங்களில் இருந்து நீலகிரி பூண்டு வாங்க வரும் விவசாயிகளை, கூட்டுறவு மண்டிக்குச் செல்லவிடாமல் தனியார் மண்டி உரிமையாளர்கள் தடுக்கின்றனர். இதனால், விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, வட மாநில வியாபாரிகள் கூட்டுறவு மண்டிக்கு வந்து பூண்டு வாங்குவதை தனியார் மண்டி உரிமையாளர்கள் தடுக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், முறையாக ஏலம் நடத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக தமிழக முதல்வருக்கு நீலகிரி உருளைக்கிழங்கு மற்றும் காய்கறி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் மனு அனுப்பியுள்ளோம்’’ என்றார்.
நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கத் தலைவர் ஆல்தொரை கூறும்போது, ‘‘விவசாயிகளின் புகார் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்போம். மேட்டுப்பாளையம் மற்றும் உதகையில் தொடர்ந்து பூண்டு ஏலம் நடக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஏலத்துக்கு பூண்டு கொண்டுவரும் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கவும், இடைத்தரகர்கள் தலையீட்டைக் குறைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன’’ என்றார்.